siima 2021

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரசிகர்கள், விமர்சகர்கள் எனப் பல தரப்பினராலும் கொண்டாடப்பட்ட இப்படம், இந்தியா மட்டுமின்றி பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகளை வென்றுவருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் என இரு பிரிவுகளில் விருது வென்றிருந்தது.

Advertisment

இந்த நிலையில், சைம்மா (siima) 2021 விருது விழா நேற்று (19.09.2021) நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள் பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி பாடகர் என 7 பிரிவுகளில் விருதுகள் வென்றது. இது, சைம்மா 2021 விழாவில் ஒரு திரைப்படம் பெற்ற அதிகபட்ச விருது எண்ணிக்கையாகும்.

Advertisment

இந்த மகிழ்ச்சியை 'நாம ஜெயிச்சிட்டோம் மாறா...' என ‘சூரரைப் போற்று’ படப் பாணியிலான மீம்ஸ்களைப் பதிவிட்டு சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.