பஞ்சாப் மாநிலம் லுதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா, மோஹித் சுலா என்பர் கிரிப்டோ கரன்சியில் தன்னை முதலீடு செய்ய சொல்லி மோசடியில் ஈடுபட்டதாக லுதியானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், போலி கிரிப்டோ கரன்சியில் தன்னை ரூ.10 லட்சம் முதலீடு செய்ய சொல்லியதாகக் குற்றம் சாட்டினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நடிகர் சோனு சூட்டை விசாரணைக்கு அழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் சோனு சூட் சாட்சியமளிக்க நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் ஒரு முறை கூட சோனு சூட் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் நீதிமன்றம் சோனு சூட்டிற்கு பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. சம்மன் அனுப்பியும் ஆஜராகத் தவறியதால் அவரை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என மும்பையின் ஓஷிவாரா காவல் நிலையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவரை 10ஆம் தேதிக்குள் கைது செய்யவும் இல்லையென்றால் அதற்கான காரணத்தை முறையாக சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ள சோனு சூட், “மூன்றாம் தரப்பினர் தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதற்கு என்னுடைய வழக்கறிஞர்கள் பதிலளிப்பார்கள். நான் இந்த விஷயத்தில் ஈடுபடவில்லை என பிப்ரவரி 10ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம். நான் வெறும் விளம்பரத் தூதர்தான் மற்றபடி எந்த வகையிலும் தொடர்பு கிடையாது. இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என்றுள்ளார்.