![Sivakumarin Sabadham](http://image.nakkheeran.in/cdn/farfuture/MiZG1Z6dFIJjM8grEl8iPO6c1D6bpd6FM-nfF1WU6-A/1631949530/sites/default/files/inline-images/30_21.jpg)
‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். அப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஆதி, தற்போது ‘சிவகுமாரின் சபதம்’, ‘அன்பறிவு’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
இதில், ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படம், வரும் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலர் நாளை (19.09.2021) வெளியிடப்பட உள்ளது. இந்த ட்ரைலரை திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என மொத்தம் 29 பேர் இணைந்து வெளியிடுகின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என அனைத்துப் பணிகளையும் ஹிப்ஹாப் ஆதியே கவனித்துக்கொண்ட இப்படத்தை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இணைந்து ஒரு படத்தின் ட்ரைலரை வெளியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.