Skip to main content
Breaking

தீபாவளி ரேசில் அயலான் விலகல் - புது ரிலீஸ் அப்டேட் வெளியீடு

 

sivakarthikeyan ayalaan new release update

 

'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உருவாகி வரும் படம் 'அயலான்'. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் 'வேற லெவல் சகோ' கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது. 

 

அந்தாண்டே படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சார்ந்த காட்சிகள் நிறைய உள்ளதால் சி.ஜி. பணிகளுக்கு அதிக நாள் தேவைப்படுவதாகவும், இதன் காரணத்தால் படம் வெளியாவதில் தாமதமாகிறது எனவும் படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால் இந்தாண்டு தொடக்கத்தில் இன்னும் படப்பிடிப்பு இருப்பதாகக் கூறி மீண்டும் படப்பிடிப்பை படக்குழு தொடங்கியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து இந்தாண்டு மத்தியில் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டது. 

 

இதனைத் தொடர்ந்து இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் எனக் கடந்த எப்ரல் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதற்கு முந்தைய நாள் படக்குழு வெளியிட்ட அறிக்கையில், "திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்குப் போதிய நேரம் தேவைப்பட்டது. 4500க்கும் அதிகமான விஎப்எக்ஸ் காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக 'அயலான்' இருக்கும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில் திடீரென்று இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலன்று வெளியாகும் எனத் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. தள்ளிப் போவதற்கான காரணத்தை படக்குழு குறிப்பிடவில்லை. இருப்பினும் புது ரிலீஸ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.