'பாடும் நிலா பாலு' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) மறைந்தார்.
கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் எக்மோ மற்றும் உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் எஸ்.பி.பி. உயிர்பிரிந்தது. நேற்று மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக எஸ்.பி.பி . சரண் தெரிவித்துள்ளார்.
அவருடைய மறைவிற்கு இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் அனைத்து திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி.பி-யின் மறைவு குறித்து பாடகர் ஜானகி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஆந்திராவில் நடந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.யை முதலில் சந்தித்தேன். சிறுவனாக இருந்த அவர் திறமையாக பாடினார். பெரிய பாடகராக உயர்வாய் என வாழ்த்தினேன். பின்னாளில் சிறந்த பாடகாராக உயர்ந்தார்.
1980,1990-களில் ஒரே நாளில் பல பாடல்களை பாடினோம். அக்காலத்தில் நாங்கள் சந்திக்காத நாட்கள் குறைவு. காமெடி செய்து ரிக்கார்டிங் மையத்தை கலகலப்பாக வைத்திருப்பார். அதெல்லாம் பசுமையான நினைவுகள். என்மீது அதிக அன்பு கொண்டவர். நான் நடுவராக கலந்த கொண்ட அந்த இசை நிகழ்ச்சி குறித்து மறக்காமல் சொல்வார். அவரது மறைவு தகவலை அறிந்த தருணம் முதல் என் மனநிலை இயல்பாக இல்லை. மனம் விவரிக்க முடியாத துயரத்தில் தவிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.