Skip to main content

"கதாநாயகி பேசிய வசனம் அனைவரையும் மிரட்டிப் போட்டுவிட்டது" - சித்தார்த்

 

siddharth speech in takkar press meet

 

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள படம் 'டக்கர்’. இப்படம் வருகிற ஜூன் 9ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.

 

இந்நிகழ்வில் நடிகர் சித்தார்த் பேசியதாவது, “கோவிட் காலத்துக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். ‘டக்கர்’ பட இயக்குநர் கார்த்திக் இந்தப் படத்திற்காக என்னை சந்தித்தபோது, சில விஷயங்கள் எனக்கு ஹைலைட்டாக தோன்றியது. எந்த இடத்திலும் நிற்காத ஸ்பீடான ஒரு படம் இது. ’டக்கர்’ என இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் பார்டர் தாண்ட தாண்ட மாறிக் கொண்டே இருக்கும். வட இந்தியாவில் ‘டக்கர்’ என்றால் போட்டி, சில ஊர்களில் ஸ்மார்ட்டாக இருப்பதை ‘டக்கர்’ என சொல்வார்கள். மோதல், சூப்பர் என பல அர்த்தம் உண்டு. இந்தப் படத்தில் ‘டக்கர்’ பயன்படுத்தியதன் காரணம், மோதல். ஒரு பொண்ணுக்கும் ஹீரோவுக்குமான க்ளாஷ்தான் அது. 

 

நடிகர் யோகிபாபு, கதாநாயகி திவய்ன்ஷா, சீனியர் ஹீரோ அபிமன்யு, முனீஷ்காந்த், விக்னேஷ்காந்த என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ‘உடலுறவு  வேண்டுமனால் வைத்துக் கொள்ளலாம், கல்யாணம் எல்லாம் வேண்டாம்’ என கதாநாயகி டிரைய்லரில் பேசும் வசனம் அனைவரையும் மிரட்டி போட்டுவிட்டது. யூடியூப் கமெண்டிலேயே இதுதொடர்பாக நிறைய விவாதங்கள். இந்த கதாநாயகி கதாநாயகனை சந்திக்கும்போது என்ன நடந்தது என்பதும் ‘டக்கர்’ரில் இருக்கும். தொழில்நுட்பக் குழுவினர் சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னாவுக்கு இந்தப் படம் மியூசிக்கலாக முக்கியமானதாக இருக்கும். ’டக்கர்’ திரைப்படம் திரையரங்குகளுக்காக எடுக்கப்பட்ட கமர்ஷியல் படம். நண்பர்களோடு, குடும்பத்தோடு நீங்கள் ஜாலியாக பார்க்கலாம். நிச்சயம் உங்களை ‘டக்கர்’ ஏமாற்றாது” என்றார்.