விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ரஷ்யாவில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்தை முடித்துவிட்டு இன்னொரு படத்தில் நடிக்கவுள்ள விஜய், அந்த படம் முடிந்தவுடன் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதனைக் கடந்த பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய போது அறிக்கை மூலம் தெரிவித்திருந்த அவர், தற்போது திரைப்படங்களில் நடித்துக்கொண்டே கட்சி பணிகளையும் கவனித்து வருகிறார். விஜய்யின் அடுத்த படத்தை அ.வினோத் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த 8ஆம் தேதி, த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய் சாய் பாபா கோயிலில் இருக்கும் புகைப்படத்தை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் பல்வேறு கேள்விகளையும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியது. பின்பு புஸ்ஸி ஆனந்த் திடீரென்று அப்புகைப்படத்தை அவரது எக்ஸ் பக்கத்திலிருந்து நீக்கினார். இது சர்ச்சையைக் கிளப்ப அப்புகைப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்தது. கொரட்டூரில் விஜய்க்கு சொந்தமான 8 கிரவுண்ட் நிலத்தில் அவருடைய தாயார் ஷோபாவிற்காக 'சாய்பாபா மந்திர்' என்று ஒரு கோயில் கட்டி உள்ளதாகவும், விஜய்க்கு சொந்தமாக சாலிகிராமத்தில் இருக்கும் ஷோபா திருமண மண்டபம் உள்ள இடத்தில் முதலில் கோவில் கட்ட ஏற்பாடு செய்து, அங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் அந்த முடிவு மாற்றப்பட்டு கொரட்டூரில் கட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனிடையே சாய்பாபா கோவில் ஒன்றுக்கு நடிகர் விஜயின் தாய் ஷோபனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கும்பாபிஷேகம் செய்து வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகியிருந்தது. இந்த நிலையில் இந்த கோயில் சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் வகையில் சோபா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அந்த சாய்பாபா கோவில் தரிசனம் மேற்கொண்ட ஷோபா, ரொம்ப நாளாக விஜய்யின் சொந்த இடத்தில் ஒரு சாய்பாபா கோயில் கட்ட ஆசையாக இருப்பதாக விஜய்யிடம் சொல்லிவந்ததாகவும், அதன்படி அவர் கட்டிக்கொடுத்துவிட்டதால் வியாழன் தோறும் அந்த கோயிலுக்கு வந்து தரிசனம் மேற்கொண்டு வருவதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார். இவர் கூறியது ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கும், அந்த புகைப்படத்தால் எழுந்த சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.