![Shine Tom Chacko about samyuktha remove his caste identity name](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZXgcdJn3ORZagr5ppB1ckBQfso_EdYBlZhPrI1_KMjg/1677132802/sites/default/files/inline-images/298_9.jpg)
மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள சம்யுக்தா, தமிழில் 'களரி', 'ஜூலை காற்றில்', 'எரிடா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து தனுஷ் நடிப்பில் கடந்த 17ஆம் தேதி வெளியான 'வாத்தி' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
முன்னதாக நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சாதியில் எனக்கு உடன்பாடில்லை என்றும், அதன் காரணமாக தன் பெயருக்கு பின்னால் இருக்கும் மேனன் என்ற சாதி அடையாளத்தை நீக்கியுள்ளதாகவும் பேசியிருந்தார். இவரது இந்த முடிவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
வாத்தி படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் சம்யுக்தா நடித்துள்ள படம் 'பூமராங்'. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதால் படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அப்படத்தில் நடித்த ஷைன் டாம் சாக்கோவிடம் ஒரு பேட்டியில் சம்யுக்தா தனது பெயரில் சாதி அடையாளத்தை நீக்கியுள்ளது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "சாதி அடையாளத்தை நீக்கிவிட்டு பட ப்ரொமோஷனுக்கு வராமல் இருப்பது என்ன பயன். ஒரு வேலையை கையில் எடுத்தால் அதனை முழுமையாக முடிக்க வேண்டும். அவர் ஏன் பூமராங் ப்ரொமோஷனுக்கு வரவில்லை. மேனனாகவோ இந்துவாகவோ முஸ்லீமாகவோ கிறிஸ்தவராகவோ இருப்பதன் பயன் என்ன? ஒரு மனிதனாக ஒருவர் தன் சக மனிதர்களைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார். ஷைன் டாம் சாக்கோ மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.