இயக்குநர் பா.ரஞ்சித் சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தி.மு.க. அரசு மீது பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தார். அதில் திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான பட்டியலின மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது பட்டியலின மக்கள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உள்ளிட்ட பல கேள்விகள் அடங்கும்.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி நேற்று சென்னையில் பேரணி நடத்தினார். அதில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் பா. ரஞ்சித் யார் என எனக்கு தெரியாது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத இடங்களை புதிய திட்டங்களுக்கு செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தார் சேகர் பாபு. அப்போது அவரிடம் பா.ரஞ்சித் பேசியது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பா.ரஞ்சித் யார் என தெரியாது என்ற அவர், “அரசியல்வாதி என்றால் எனக்கு தெரியும். இவரை எனக்குத் தெரியாது” எனப் பதிலளித்தார்.
முன்னதாக பா.ரஞ்சித்தின் கேள்விகளுக்கு திமுக தரப்பிலிருந்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் சரவணன், “தமிழ் நாட்டின் காவல்துறை சிறப்பான அமைப்பு. இந்த வழக்கில் எல்லா குற்றவாளிகளையும் கண்டறிந்து, அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரக்கூடிய வல்லமை பெற்றவர்கள்” என விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.