விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசரில் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக காட்சி இடம்பெற்றது. மத வெறுப்பை தூண்டும் வகையில் படம் இருப்பதாக பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கேரளா மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து பெரும் சர்ச்சைக்கு மத்தியில் நேற்று (05.05.2023) இப்படம் வெளியானது. தமிழ்நாட்டில் இப்படம் வெளியான திரையரங்குகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் தீவிர சோதனைக்கு பிறகு தான் பார்வையாளர்கள் உள்ளே அனுப்பப்படுகின்றனர். நேற்று முதல் நாளில் இப்படம் இந்தியா முழுவதும் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "இசுலாமியர்களை இழிவுபடுத்தும் இப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும், இல்லையேல் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என நேற்று ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று சென்னை அமைந்தகரையில் உள்ள வணிக வளாகத்தின் திரையரங்கம் முன் நாம் தமிழர் கட்சி சார்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "நீண்ட காலமாகவே பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதி வரவில்லை என்றால் இங்கு கதை கிடையாது. இது காலம் காலமாக நிறுவி வந்த கலாச்சாரம். பயங்கரவாதம் என்றாலும் தீவிரவாதியாகவும் இருந்தாலும் ஒரு இஸ்லாமியராகத் தான் இருப்பார்கள். இது சித்தரிக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு. ஆனால் இந்து மாதத்தில் பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது. இதை விமர்சித்து நான் ஒரு படம் எடுக்கிறேன். நீங்க எனக்கு தணிக்கை கொடுப்பீர்களா. என்னை வெளியிட அனுமதிப்பீர்களா.
தணிக்கை குழு வாரியம் என்பது பாஜகவின் கட்சி அலுவலகம் தான். அதில் இருப்பவர்கள் எல்லாம் பாஜகவில் உறுப்பினர்கள். இது சர்வாதிகாரம் மட்டுமல்ல, கொடுங்கோன்மை. இப்படத்தில் பெண்களை மதமாற்றம் செய்கிறார்கள். அதனால் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என சொல்கிறார்கள். அதைத் தான் நாங்களும் சொல்கிறோம். உங்க குழந்தைகளை இந்த படத்தை பார்க்கவிடாமல் தடுத்து நிறுத்துங்கள். மதம் என்பதும் வழிபாடு என்பதும் அவரவர் விருப்பம். பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று இந்து மதம் சொல்கிறது. மேலும் வர்ணாசிரம கோட்பாட்டை கடைபிடிப்பது தான் இந்து தர்மமே என்கிறது.
இஸ்லாமிய மதம் என்பது இந்து மதத்திற்கு எதிராக வந்த ஒரு புரட்சி. இதையெல்லாம் தெரியாமல் இங்கு வந்து மக்களை குழப்பி கேரளா ஸ்டோரி, கர்நாடக ஸ்டோரி, ஆந்திரா ஸ்டோரி, பீகார் ஸ்டோரி என படம் எடுக்கிறார்கள். எந்த ஸ்டோரியும் இங்கே ஓடாது. எனவே தமிழக அரசு சட்ட ஒழுங்கிற்கு கேடு விளைவிக்கும் இந்த நெருக்கடியான சூழலைப் புரிந்து கொண்டு படத்தை தடை செய்ய வேண்டும்" என்றார்.