தூசி படிந்த நிலப்பரப்போ அல்லது அழகிய நிலப்பரப்போ, ஆனால் இவருடைய காட்சி நேர்த்தியால் அது ஒரு புது சினிமா அனுபவத்தை எப்போதும் நமக்கு அளிக்கும். ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் மிகச்சிறந்த ஒளிப்பதிவால் நல்ல அங்கீகாரத்தை பெற்றவர். டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் "அடங்க மறு" பற்றி சில விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். ஜெயம் ரவி பற்றி அவர் பேசும்போது... "நானும் ஜெயம் ரவியும் நெருங்கிய நண்பர்கள், நாங்கள் மிக நீண்ட காலம் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கிறோம். ஒரு மென்மையான நபர், கேமரா ஆன் செய்த சில வினாடிகளுக்குள், மிகவும் கம்பீரமாக உருமாறுவதை கற்பனை செய்து பாருங்கள். உண்மையில், ஜெயம் ரவியின் மூர்க்கத்தனமான போலீஸ் நடிப்பில், அதன் வெப்பத்தை நான் உணர முடிந்தது.
போகன் மற்றும் தனி ஓருவனில் அவரின் போலீஸ் நடிப்பை பார்த்து நான் வியந்திருக்கிறேன். ஆனால் அடங்க மறுவில் அவரது நடிப்பு, முந்தைய திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அவரது உடல் மொழி மற்றும் மேனரிஸம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பது தான் இதற்கு காரணமாக இருக்கும். ராஷி கண்ணாவும் ஒவ்வொரு காட்சிக்கும் முன்பாக, மிகவும் ஈடுபாட்டோடு தயாராவார்" என்றார். மேலும் தொழில்நுட்ப குழுவினர் பற்றி சத்யன் சூரியன் பேசும்போது... "இயக்குனர் கார்த்திக் தங்கவேலு கேப்டன் என்ற முறையில் மிகச்சரியான முன் தயாரிப்புடனும், திட்டமிடலுடனும் இருந்தார். இது சிறந்த முறையில் படமாக்க எனக்கு நிறைய உதவியது. சண்டைக்காட்சிகளை படம் பிடிப்பது மிகவும் சவாலானது, குறிப்பாக க்ளைமாக்ஸ் சண்டை. இது வெறுமனே வழக்கமான அடிதடி மட்டுமல்லாமல், சில புத்திசாலித்தனமான விஷயங்களையும் உள்ளடக்கியிருந்தது. ஸ்டண்ட் சிவா மற்றும் அவரது மகன் கெவின் குமார் ஆகியோரும் கலை இயக்குனரும் மிகச்சிறப்பாக செயல்பட்டதால், நானும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது" என்றார். அடங்க மறு படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்க, கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கிறார்.