Skip to main content

"மீண்டும் வெற்றி பெற்ற தோழர்” - சசிகுமார் வாழ்த்து 

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
sasikumar wishes su venkatesan mp

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடந்த வாக்குப் பதிவுகளின் எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டு முடிந்தது. மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க, தனித்து 240 இடங்களையும் காங்கிரஸ் 99 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. அதனடிப்படையில் அதிக தொகுதிகளை வென்ற பா.ஜ.க., கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியை அமைக்க உள்ளது. இதனையொட்டி நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றுள்ளனர். மேலும் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் இந்தியா கூட்டணி வென்றுள்ளது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலத்திலும் பா.ஜ.க. தலமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிப் பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை. இதையொட்டி வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசனுக்கு இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசிகுமார் வெளியிட்ட எக்ஸ் வலைத்தளப் பதிவில், “மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்ற தோழர் சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்” என்றார். மேலும் சு.வெங்கடேசனுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். சு.வெங்கடேசன் மொத்தம் 4,30,323 வாக்குகள் பெற்றிருந்தார். மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசனை விட 2,09,409 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் இரண்டாவது முறையாக மதுரை தொகுதியில் பெற்றுள்ளார். முன்னதாக 2019ஆம் ஆண்டு அதே தொகுதியில் 4,47,075 வாக்குகள் பெற்று எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட 1,34,119 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்