சசிகுமார் கடைசியாக இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த செப்டம்பரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடிப்பில் எவிடன்ஸ், ஃப்ரீடம், பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட சில படங்கள் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் சிம்ரனுடன் இணைந்து ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்க ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். படத்திற்கு 'டூரிஸ்ட் ஃபேமிலி'(Tourist Family) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
டைட்டில் டீசரை பார்க்கையில், சசிகுமாரின் குடும்பம் சில காரணங்களால் தங்கியிருந்த வாடகை வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக ஓட தயாராகின்றனர். அப்போது நடக்கும் சம்பவங்களை கலகலப்பாக சொல்லும் விதமாக டீசர் அமைந்துள்ளது. வீட்டை விட்டு போன பிறகு அவர்களின் பயணம் என்ன ஆனது என்பதை காமெடியாக சொல்லியிருப்பது போல் தெரிகிறது. இதில் இலங்கை தமிழில் அனைவரும் பேசுவது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என படக்குழு டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் விரைவில் ரிலீஸ் தேதி வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.