மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் பட விழாவில் பேசிய நடிகையும், மணிரத்னத்தின் மனைவியுமான சுகாசினி, "பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு அதிகம் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில்தான் நடந்துள்ளது. இது உண்மையான தமிழ் கதையாக இருந்தாலும், தமிழ்நாட்டில் பொள்ளாச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு இடங்களில் அதிகபட்சமாக 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்துள்ளது. மீதமுள்ள படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் இங்குதான் நடந்துள்ளது. ஆகையால் இது தெலுங்கு மக்களின் படம். நீங்கள்தான் இதற்கு முழு ஆதரவு தர வேண்டும்" கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்காக சரத்குமார் சந்தியாளர்களை சந்தித்து நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது நிருபர் ஒருவர், சுஹாசினி பேசியதாய் குறிப்பிட்டு, இது அவர்களின் படம் என்றால் நமது பெருமையை விட்டுக்கொடுப்பது போல இல்லையா என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சரத்குமார், "அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்க.இது நம்ம பார்வையை பொறுத்து தான் இருக்கு. சுஹாசினி சொன்னதை நான் தவறு என்று சொல்லமாட்டேன். ஒரு ஆர்வத்தில் சுஹாசினி படப்பிடிப்பை நாங்க வெளிமாநிலத்தில் நடத்தினோம் என்று சொன்னது அந்த இடத்திற்கு பொருத்தமாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்று நினைத்து கூறியிருக்கலாம். அதை நாம தவறாக எடுத்துக் கொள்ள கூடாது. சுஹாசினி சொல்லியதை ரப்பர் வச்சு அழித்துவிடுங்கள். குறை கண்டுபிடித்தால், எல்லா விஷயத்திலும் கண்டுபிடிக்கலாம். குறையை மறந்துவிட்டு நிறையை மட்டும் பேசுவோம" என பதிலளித்துள்ளார்.