கோ, அஞ்சான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனா சிங். இப்போது வேட்டைக்காரி என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காளிமுத்து காத்தமுத்து இயக்கியுள்ள இப்படத்தை விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரித்துள்ளார். படத்தில் அனைத்து பாடல்களுக்கும் கவிஞர் வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மே மாதம் நடைபெற்றது. படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. விரைவில் ரிலீஸாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படம் தொடர்பாக சஞ்சனா சிங்கை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அப்போது படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்த அவர் திரைத்துறையில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “பாலியல் துன்புறுத்தல் எல்லா இடத்திலும் இருக்கிறது. சினிமா துறையில் இருப்பதை அதிகமாக பேசுகிறார்கள். ஹேமா கமிட்டி உருவானது நல்லதுதான். அதை நான் மதிக்கிறேன். ஆனால் ஒரு பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் அதை அப்போதே அவர் வெளிகொண்டு வரவேண்டும். அதை விட்டுவிட்டு 10 வருஷம் கழித்து சொல்வது சரியில்லை. அவர் சொல்லாததால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் துன்புறுத்தல் நடந்தால் அதை அப்போதே வெளியில் கொண்டு வரவேண்டும்” என்றார்.
தொடர்ந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசிய அவர், “என்னுடைய வாழ்க்கையில் நான் ஒரு ஜோக்கர். நம்மை பார்த்து நம்மளே சிரிப்பது பெரிய விஷயம். அது மாதிரிதான் நான் வாழ்ந்து வருகிறேன். அதனால் நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு குறை கூட கிடையாது” என்றார்.