கிருஷ்ணகுமார் குன்னத், பிரபல பின்னணி பாடகரான இவர் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தமிழில் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி 60-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள இவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் மற்றும் தமன் ஆகியோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், "என் 'உயிரின் உயிரே' மறைந்தது. லெஜண்ட் படத்தில் கடைசியாக அவர் பாடிய “கொஞ்சி கொஞ்சி” பாடலை உலகமே புகழ்ந்து கொண்டிருக்கும் போது, இந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன். அவரின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எனது இரங்கல்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்தான ட்விட்டர் பதிவில் யுவன்ஷங்கர் ராஜா, "நம் நாட்டின் இசை சமூகத்திற்கு இது ஒரு சோகமான வாரம். சித்து மூஸ் வாலாவை தொடர்ந்து தற்போது கே.கே.; வாழ்க்கை கணிக்க முடியாதது, அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாதது. உங்களை மிஸ் செய்கிறோம் கேகே" எனத் தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நண்பரின் ஆத்மா சாந்தியடையட்டும். இது ஒரு மோசமான இழப்பு. கே.கே.வின் மாயாஜாலக் குரல் மற்றும் இசை என்றென்றும் நம்மிடையே எதிரொலிக்கும்" எனக் குறிப்பிட்டு தன் இரங்கலைத் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் தமன் இது குறித்து, "இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அற்புதமான திறமை கொண்ட அற்புதமான மனிதர் இன்று நம்மிடம் இல்லை. கே.கே-வின் ஆத்மா சாந்தியடையட்டும். வாழ்க்கை கணிக்கமுடியாதது" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.