'பாகுபலி 2' என்ற மிகப்பெரும் வெற்றிப் படத்திற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சாஹோ'. சுமார் ரூ. 350 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. இருந்தாலும் படம் பார்த்தவர்களிடையே இது கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது.
இந்தப் படத்தை பார்த்த பலரும் உணர்ந்தது, 'கே.ஜி.எஃப் படத்தை நினைவுபடுத்தும் பல விஷயங்கள் இதில் இருக்கின்றன' என்பதுதான். பாகுபலி 2 வெளியான சில மாதங்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டார்கள் என்றாலும் கே.ஜி.எஃப் நமக்கு கொடுத்த தாக்கம் அப்படி யோசிக்க வைக்கிறது என்று சொல்லலாம். இவ்விரு படங்களின் அடிப்படை கதை கூட ஒரே மாதிரிதான் இருக்கிறது. கே.ஜி.எஃப்பில் கோலார் தங்க வயல் தங்க சுரங்கத்தை கட்டி ஆண்டு வருபவனை தீர்த்துகட்டி அந்த இடத்தைப் பிடிக்க நினைக்கும் கூட்டாளிகள், வாரிசுகள் இவர்களுக்குள் நடக்கும் பிரச்சனைதான் கே.ஜி.எஃப். அதாவது அதிகாரமும் பெரும் செல்வமும் குவிந்த ஒரு சக்திவாய்ந்த நாற்காலிக்கு ஆசைப்பட்டு மோதிக்கொள்வார்கள். அதைப்போலத்தான் சாஹோவிலும் வாஜி சிட்டி என்ற ஒரு செல்வம் கொழிக்கும் நகரில் ராய் என்பவர் ஆண்டு வரும் கேங்ஸ்டர் சாம்ராஜ்யத்திற்கு அவர் இறந்தபின் யார் தலைமை ஏற்கப் போகிறார்கள் என்ற போட்டிதான் படத்தின் அடிப்படை கதை.
இரண்டு படங்களிலுமே மிகைப்படுத்தப்பட்ட, பிரம்மாண்ட ஸ்டண்ட் காட்சிகள் அதீதமாக இருக்கும். இரண்டின் நாயகர்களும் பறந்து பறந்து அடிக்கக்கூடிய சாகசக்காரர்கள். இப்படி அடிப்படையாக சில ஒற்றுமைகள் இருக்க கே.ஜி.எஃப் செய்த மேஜிக்கை சாஹோ மிஸ் செய்துள்ளது. சாஹோ படத்தை பார்த்து வந்தவர்கள் எல்லாம் சற்று களைப்பாகத்தான் தியேட்டரைவிட்டு வெளியேறுகிறார்கள்.
பல அம்சங்களில் ஒன்று போல இருந்தாலும் கே.ஜி.எஃப்பில் இருந்த இரண்டு விஷயங்கள் சாஹோவில் மிஸ்ஸிங். முதல் விஷயம் பார்த்தால் எமோஷன்தான். கே.ஜி.எஃப் படத்தில் தொடக்கத்திலிருந்தே தாய் பாசம் பயணிக்கும். இந்தத் தாய்ப்பாசம் என்ற விஷயத்தை சினிமாவில் கேசட் தேயத் தேய ஓட்டி இருக்கிறார்கள் என்றாலும் பார்வையாளர்களுக்கு அந்த எமோஷன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சிறுவயதிலேயே தாயை இழந்த ஒருவன், அடுத்த வேளை உணவுக்கு வழி தெரியாத ஒருவன், தாயின் வார்த்தைகளை பின்பற்றி மிகப்பெரிய ஆளாக வருகிறான் என்ற எமோஷன் ரசிகர்களை படத்துடன் ஒன்ற வைத்தது. சாஹோவிலும் அப்படி ஒரு எமோஷன் இருந்தாலும் படத்தின் இறுதிக்கட்டத்தில்தான் அந்த விஷயமே தொடப்பட்டிருக்கும். முதல் இரண்டு மணிநேரம் தாண்டி திடீரென ஒரு ரசிகரால் படத்துடன் ஒன்ற முடியுமா என்பது கேள்விக்குறி.
இரண்டாவது விஷயமாக பார்த்தால் காரணங்கள். ஒரு சண்டைக்கோ, ஒரு பாடலுக்கோ தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே அது வொர்க்-அவுட் ஆகும். உதாரணத்திற்கு கே.ஜி.எஃப் படத்தில் ஹீரோவின் அறிமுக காட்சியை நினைவுப் படுத்திக்கொள்ளுங்கள். நூறு ரவுடிகளை ராக்கி தேடித் தேடி போய் அடிப்பது சிரமம் என்று அனைத்து ரவுடிகளையும் ஒரே இடத்தில் சேர்ப்பதற்காக அவரே வில்லன் குரூப்பிடம் சென்று சிக்கிக்கொள்வார். இது பழைய ஸ்டைல், இதில் லாஜிக் குறைவு என்பதையெல்லாம் தாண்டி பெயரளவுக்காவது காரணங்கள் இருந்தன. கே.ஜி.எஃப் படத்தில் துப்பாக்கி பயன்படுத்தி வில்லன்களை கொல்ல வேண்டிய சூழலில் துப்பாக்கியை பயன்படுத்துவார். கையால் அடிக்க வேண்டிய சூழலில் கையால் அடிப்பார். இரண்டும் முடியாத அல்லது தேவைப்படாத இடத்தில் திரும்பி வருவார். கருடனை கொல்லப்போகும் சீனை உதாரணமாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், சாஹோவில் எதற்கும் காரணங்கள் இல்லை. துப்பாக்கியை வைத்து சுட்டு ஒரு நிமிடத்தில் முடிக்கக்கூடிய விஷயத்தை துப்பாக்கி வைத்துக்கொண்டே வில்லன்களும் பிரபாஸும் தூக்கிப்போட்டு அடித்து, குத்தி மோதிக்கொள்கின்றனர். ஆயிரம் குண்டுகள் கடந்தாலும் பிரபாஸ் மீது ஒன்றுமே படுவதில்லை. இதெற்கெல்லாம் மேலாக வில்லனின் அடியாட்கள் நூறு பேர் துப்பாக்கி வைத்திருக்க, அதற்கு மேலாக ஒரு ஆயிரம் பேரை அழைக்கிறார் வில்லன். என்ன காரணம்?
கே.ஜி.எஃப்பிலும் பில்டப்புகள் ஏராளம், சாஹோவிலும் ஏராளம். ஆனால் கே.ஜி.எஃப் பில்டப்புகள், இந்த இரண்டு காரணிகளால் மக்களால் ரசிக்கப்பட்டது. இந்த இரண்டுதான் சாஹோவில் இல்லாதது. இந்த ரிசல்ட்டால் ரசிகர்கள் சொல்வது இதுதான், "பில்ட்-அப் கொடுங்க... கொஞ்சம் பேஸ்மண்ட் போட்டுட்டு கொடுங்க".