இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா, யோகி பாபு மற்றும் கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன'. இப்படத்தில் அதிதி பாலன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வீரசக்தி தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பாடல்களுக்கு வைரமுத்து வரிகள் எழுதுகிறார்.
இப்படத்தின் முதல் பாடல் 'செவ்வந்தி பூவே' லிரிக் வீடியோ கடந்த 5ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், கவுதம் மேனன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில் அவரது திரை பயணத்தில் நடந்த சில நிகழ்வுகளையும் பாரதிராஜாவை பற்றியும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும் விஜய்யின் திரை பயணம் குறித்து சில நிகழ்வுகளைச் சொன்னார். அவர் பேசுகையில், "நான் திரைத்துறைக்கு வந்து 50, 60 படம் டைரக்ட் பண்ணின சமயம். அப்போது விஜய்யை நான் அறிமுகம் செய்ய வேண்டும் என நினைக்கவில்லை. மாறாக நம்மை விட பெரிய இயக்குநர் விஜய்யை அறிமுகப்படுத்தினால் நல்லா இருக்குமே என நினைத்தேன். அதனால் விஜய் பற்றி ஒரு ஆல்பம் ரெடி பண்ணிவிட்டு முதலில் சென்ற இடம் பாரதிராஜா அலுவலகம்.
அவரிடம் ஆல்பத்தை காட்டினேன். அவர், 'ஏன்யா... நீயே பெரிய டைரக்டர் ஆச்சே.. நீ பண்ணுயா' என்று சொல்லிவிட்டார். அவர் பண்ணமாட்டேன் என்பதை மறைமுகமாகச் சொன்னார். ஆரம்பக் காலகட்டத்தில் நல்ல இயக்குநர்கள் எல்லாம் விஜய்யை வைத்து படம் எடுக்கவில்லை. அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். அதன் பிறகு என் கையில் வந்ததனால் தான் விஜய் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக ஆனார். அதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்" என்றார்.