Skip to main content

''இதெல்லாம் பேசி முடிவானால்தான் படப்பிடிப்பைத் தொடங்க முடியும்'' - ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

dvv

 

தொலைக்காட்சி சீரியல்களுக்கான படப்பிடிப்பு தொடங்க அனுமதி வழங்கியமைக்காகத் ஃபெப்சியும், தென்னிந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (STEPS) முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தகவல் மற்றும் விளம்பர அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு சமீபத்தில் நன்றி தெரிவித்துள்ளனர்.
 


இந்நிலையில் தற்போது ஃபெப்சி அமைப்பு, தொழில்துறை போலவே 50% பணியாளர்களுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஸ்டெப்ஸ் அமைப்பைச் சேர்ந்த சுஜாதா விஜயகுமார் மற்றும் குஷ்பு, மனோபாலா உள்ளிட்டோர் நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு முடிந்த பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஃபெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி...

''சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க தமிழக அரசு அனுமதியளித்திருப்பதற்கு நன்றி தெரிவித்தோம். மேலும், சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளனர். ஆனால் இதர துறைக்கு 50% தொழிலாளர்களுடன் அனுமதி கொடுத்துள்ளார்கள். சின்ன தொடராக இருந்தால் 100 பேர் வரை இருப்பார்கள். பெரிய தொடராக இருந்தால் 200 பேர் இருப்பார்கள். தற்போது 20 பேர் என்றால் நடிகர்களே 20 பேர் வந்துவிடுவார்கள். சின்னத்திரை படப்பிடிப்பு என்பது 60 பேர் வரை இல்லாமல் ஆரம்பிக்கவே முடியாது. ஆகையால் 24 யூனியன் இருக்கிறது. யூனியனுக்கு ஒருவர் என்றாலே 24 பேர் வந்துவிடுவார்கள். ஆகையால் நடிகர்கள் எல்லாம் சேர்த்து குறைந்தபட்சம் 50 பேர் கொண்டு படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதைப் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
 

 


அதேபோல் சின்னத்திரை சங்கம் சார்பாகவும் கோரிக்கை வைத்துள்ளோம். அதன்படி படப்பிடிப்புக்கு வெளியூரிலிருந்து நடிகர்கள் வருவார்கள். அவர்கள் கரோனா நெகடிவ் என்ற சான்றிதழுடன் வந்தால் தனிமைப்படுத்தக் கூடாது என்று கேட்டிருக்கிறோம். அதைப் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். மேலும் முதல்வரிடம் பேசிவிட்டு சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதெல்லாம் பேசி முடிவானால்தான் படப்பிடிப்பு தொடங்க முடியும்" எனக் கூறியுள்ளார். இவரை தொடர்ந்து ஸ்டெப்ஸ் செயலாளர் நடிகை குஷ்பு பேசும் போது... "போட்டி போட்டுக் கொண்டு படப்பிடிப்பைத் தொடங்க விரும்பவில்லை. ஏனென்றால் முதலில் பாதுகாப்புதான் முக்கியம். அனைத்துக்கும் முறையான அனுமதி கிடைத்தவுடன், ஒரே சமயத்தில் அனைத்து சீரியல் படப்பிடிப்பும் தொடங்கும்" என்று தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்த விஷயத்தில் திராவிட கழகங்களைப் பின்தொடர வேண்டும்” - ஆர்.கே. செல்வமணி

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
rk selvamani about censor issue

நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. இப்படத்தின் கதை சில வருடங்களுக்கு முன் நடந்த பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, காங்கிரஸின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி, ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் படத்தின் தலைப்பிற்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு அனுமதி அளிக்கவில்லை என்பதால் படத்தின் பாடலை வெளியிட முடியாத சூழல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு படத்தின் காட்சிகளைத் தான் வெளியிடக் கூடாது என்றனர். கேசட்டுகளை வெளியிடலாம் என்று கூறி படத்தின் பாடலை வெளியிட்டார். 

இந்நிகழ்ச்சியில் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், “இந்த சென்சார் அராஜகத்திற்கு முதலில் பலியான இயக்குநர் நான் தான். அன்று சற்று காம்ப்ரமைஸ் ஆகி சென்றதால் என் படம் வெளியானது. ஒரு வேளை அன்று விடாப்பிடியாக போராடி இருந்தால் இன்று இவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்களோ என்னவோ? நக்கீரன் சார் சொன்னதைப் போல, நாங்கள் கொஞ்சம் காம்ப்ரமைஸ் ஆகிவிட்டோம். அடுத்து ஒருவர் வந்து எதிர்வினை ஆற்றும்போது தாக்குதல் துவங்கி விடுகிறது. 

இரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். எதார்த்தத்தை புரிந்து கொள்ளுதல், அதே நேரம் வளைந்து போகவும் கூடாது. புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் படங்களில் இது கற்பனை என்கின்ற ஒரு கார்டை போட்டு, உண்மை சம்பவங்களில் இருந்து சில விஷயங்களை மாற்றி வீரப்பன் என்பதை வீர்பத்திரன் என்றும் ஆட்டோ சங்கர் என்பதை ஆட்டோ தர்மா என்றும் லேசாக மாற்றி திரைப்படமாக எடுத்தேன். மக்கள் சரியாக நான் எதைப் பற்றி கூறுகிறேன் என்பதை புரிந்துகொண்டு ரசித்தார்கள். அந்தப் படங்கள் தந்த வெற்றியின் உற்சாகத்தில் நான் அடுத்து குற்றப்பத்திரிக்கை என்கின்ற படத்தை எடுத்தேன். அப்பொழுது நான் புரிந்து கொண்ட உண்மை, உண்மையை பேசக்கூடாது என்பதே. நேசமுரளி சொன்னது போல் விளம்பரங்கள் மற்றும் படங்கள் மூலம் பொய் பேசலாம், வன்மம் வளர்க்கலாம். ஆபாசம் பேசலாம். ஆனால் உண்மை பேசக்கூடாது என்பதை அறிந்து கொண்டேன். 

இந்த விஷயத்தில் கலைஞர்கள் திராவிட கழகங்களைத் தான் பின்தொடர வேண்டும் என்று சொல்வேன். கெடுபிடிகள் இருந்தாலும் தங்கள் படங்களின் மூலம் கருத்துகளை பரப்பி ஆட்சிக் கட்டிலுக்கு வந்த திராவிட கழகங்களைத் தான் கலைஞர்கள் பின்பற்ற வேண்டும். அதே நேரம் அதிகாரத்திலிருப்பவர்கள் அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் அல்ல. கல்லில் தொடர்ச்சியாக மோதிக் கொண்டே இருந்தால் தலை உடையும் என்று தெரிந்தும் தொடர்ச்சியாக முட்டிக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம் இல்லை. உளியினால் அந்தக் கல்லை உடைக்க முயல்வது தான் புத்திசாலித்தனம். ஒரு காலத்தில் மக்களைக் காக்கவே போலீஸும் அதிகாரமும் இருந்தது. ஆனால் தற்போது போலீஸும் அதிகாரமும், கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றவே போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். 

துணிச்சலான மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களையே இப்படி மிரட்டுகிறார்கள் என்றால், நேசமுரளி போன்றோரை சுண்டைக்காய் நசுக்குவது போல் நசுக்கிவிடுவார்கள். எனவே இயக்குநர் நேசமுரளி புத்திசாலித்தனமாக இந்தப் பிரச்சினையை அணுகி, தன் படத்தை வெளியிட்டு மேலும் பல படங்கள் எடுத்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார். 

Next Story

“இரும்புக் கரம் கொண்டு களைய வேண்டும்” - த்ரிஷாவிற்கு ஆதரவாக ஃபெப்சி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
fefsi about trisha admk member issue

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்ட நிலையில், சசிகலா தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது அங்கு பல சம்பவங்கள் நடைபெற்றதாக அதிமுகவின் முன்னாள் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி. ராஜு தற்போது குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் நடிகை த்ரிஷா மற்றும் கருணாஸ் குறித்தும் அவதூறாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில், திரைத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சேரன், “வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலையும், பொருளாளர் கார்த்தியையும் டேக் செய்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் இறங்கி தரம் தாழ்ந்து பேசும் இதுபோன்ற மனிதர்களை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு அறுவறுப்பாக உள்ளது. இந்த அவதூறுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி இவ்விவகாரம் தொடர்பாக எனது சட்ட ஆலோசகரே பேசுவார்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் ஃபெப்சி இந்த விவகாரம் தொடர்பாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “இன்றைய சமூக வலைத்தளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட ஏ.வி. ராஜீ என்பவர் திரைத்துறை குறித்து சில தரமற்ற, அவதூறுகளைக் கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்பந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் கருணாஸையும் சம்பந்தப்படுத்தி இந்த கீழ்த்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார். அரசியலில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதற்கு அவர்களுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, கீழ்த்தரமான அவதூறுகளைத் திரையுலகப் பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இத்தகைய அநாகரிகமான கீழ்த்தரமான செயலை, தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறோம். பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரத குடியரசின் தலைவராக முர்மு வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில் ‘பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மீதும்’ நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்புக் கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்குப் பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.