தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் மூலம், திருப்போரூர் அடுத்த பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கான 1,000 குடியிருப்புகள் அமைக்கும் திட்டத்துக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி திரைத்துறையில் ஏற்பட்ட நஷ்டம் குறித்து பேசியபோது...
''இது திரைப்பட தொழிலுக்கு மிகவும் சோதனையான காலம். கரோனா பொதுமுடக்கத்தால் திரைத்துறைக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்குவதில் தற்போது சிக்கல் இல்லை. ஆனால், அனுமதி பெறுவதில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளோம். 18 ஆயிரம் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படும். கரோனாவால் 100 சதவீதம் திரைப்பட தொழில் பாதிக்கப்பட்டுள்ளது'' எனக் கூறியுள்ளார்.