Skip to main content

ரீ ரிலீஸில் ஹிட்டடிக்கும் பழைய படங்கள்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
re release movie gets good response

வெற்றி பெற்ற பழைய படங்களை மீண்டும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ரீ ரிலீஸ் செய்யப்படுவது நீண்ட காலமாக இருந்து வருகிறது. முதல் கொரனா முடிந்த சமயத்தில் புதுப் படங்கள் பெரிதளவு தியேட்டரில் ரிலீஸாகாமல் இருந்ததால், ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களான பருத்தி வீரன், எம்.எஸ். தோனி உள்ளிட்டவை ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. மேலும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் ஆதரவு எந்த படத்திற்கு அதிகமாக இருக்கிறதென்பதை வாக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் படங்களை ரீ ரிலீஸ் செய்து வந்தன பிரபல திரையரங்குகள். இதில் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, அன்பே சிவம் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இந்த படங்கள் வெளியான சமயத்தில் வரவேற்பு பெறவில்லை என்றாலும் ரீ ரிலீஸுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 

குறிப்பாக கல்ட் க்ளாசிக் என்று அடையாளப்படுத்தப்பட்ட படங்கள் காலத்தை கடந்து ரசிக்கும்படியாக இருக்கும் படங்கள், இன்றைய காலத்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதனால் மேற்குறிப்பிட்ட அடையாளப்படுத்தப்பட்ட படங்கள் எல்லாம் திரையரங்கிற்கு வருவதை ரசிகர்கள் கொண்டாடுவதோடு ஆரவாரமாக ஆதரித்தும் வருகின்றனர். பிடித்த படங்களை ரீ ரிலீஸ் செய்யும்படியும் திரையரங்க உரிமையாளர்களுக்கு சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்த வரிசையில் சமீப காலமாக ரீ ரிலீஸ் செய்யும் படங்கள் அதிகரித்து வருகின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி தற்போது இருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களும் இந்த லிஸ்டில் இருக்கின்றன. எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன், சிவாஜியின் வசந்த மாளிகை, ரஜினியின் அண்ணாமலை, கமலின் வேட்டையாடு விளையாடு, விஜய்யின் காதலுக்கு மரியாதை, ஷாஜகான், திருமலை, அஜித்தின் வாலி, சிட்டிசன், பில்லா, காதல் மன்னன், சூர்யாவின் வாரணம் ஆயிரம், தனுஷின் வட சென்னை, 3, யாரடி நீ மோகினி, விஜய் சேதுபதியின் 96, ஜீவாவின் சிவ மனசுல சக்தி, பிரபு தேவாவின் மின்சாரக் கனவு என ஏகப்பட்ட படங்கள் அடங்கும். இதில் பல படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. 

இதுபோக கில்லி படம் அடுத்த மாதம் ரீ ரிலீஸாகவுள்ளது. தொடர்ந்து ஹிட்டடித்த படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருவதால் மேலும் பல சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சார்ந்த செய்திகள்

Next Story

“அம்பேத்கர் வலியுறுத்திய சமூக நீதி எல்லோருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம்” - விஜய்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
 Vijay said Lets make sure social justice emphasized by Ambedkar available to all

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 134ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் அவரது பிறந்தநாளை தமிழக அரசு சமத்துவநாளாக அறிவித்து சாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்து வருகிறது.

இந்த நிலையில் அண்மையில் கட்சி தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அவருடைய கட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவர் வலியுறுத்திய சமூக நீதி, சமத்துவம், சம உரிமை ஆகியவை எல்லோருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம்” என பதிவிடப்பட்டுள்ளது.

Next Story

‘ஸ்டார்ட் மியூசிக்...’ - ரெடியான விஜய் 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
vijay the goat movie first single update

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அதனைத் தொடர்ந்து கடைசியாக கேரளாவில் நடந்து முடிந்தது. காவலன் படத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து கேரளாவிற்கு விஜய் சென்றதால் அவருக்கு உற்சாக வரவேற்பு கேரள ரசிகர்களால் கொடுக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலும் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அவர்களிடம் விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோக்களும் வைரலானது.

இதையடுத்து கடந்த 3ஆம் தேதி படத்தில் நடித்து வரும் பிரபு தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி போஸ்டர் ஒன்றையும், கடந்த 6ஆம் தேதி பிரஷாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது. இதனிடையே ரஷ்யாவில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அண்மையில் அங்கு, படப்பிடிப்பில் விஜய் விளையாடும் சிறிய வீடியோ ஒன்று வெளியானது.

இதனைத் தொடர்ந்து இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெங்கட் பிரபு, “நாளை சம்பவம் உறுதி” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு தயாரா என குறிப்பிட்ட ஒரு கலர்ஃபுல் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. 

இந்த நிலையில் இப்பாடல் விஜய் பாடியுள்ளதாகவும் நாலை மாலை 6 மணிக்கு வெளிஒயாகும் எனவும் பாடலுக்கான புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் விஜய் ‘ஸ்டார்ட் மியூசிக்...’ என சொல்கிறார் உடனே பாடலின் மியூசிக் ஆரம்பிக்கிறது. இப்பாடலுக்கு மதன் கார்கி வரிகள் எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் முதல் முறையாக விஜய் பாடியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதற்கு முன்பு விஜய் பாடிய பாடல்கள் அனைத்தும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதற்கு தயாராகியுள்ளதாக தெரிகிறது.