விஜய் டிவி புகழ் கவின், ரம்யா நம்பீசன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'நட்புன்னா என்னான்னு தெரியுமா' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன் தியேட்டர் உரிமையாளர்கள் குறித்தும், தன் படக்குழு குறித்தும் கடுமையாக தாக்கி பேசினார். இந்நிலையில் இதுகுறித்து அவர் நமக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்து பேசியபோது.... "ஸ்டார் வேல்யு இல்லாத எவ்ளோ படங்கள் இங்கு வெளியாகி ஜெயித்திருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஏதோ ஒரு பின்புலத்தோடு வெளிவந்தவையாகும். என் படத்திற்கு அப்படி ஏதும் அமையவில்லை. இருந்தும் வணிகரீதியாக இல்லையென்றாலும் என் படம் நல்ல பெயர் வாங்கியுள்ளது. இரண்டு பெரிய நிறுவனங்களோடு நான் இங்கு மோதி நிற்கிறேன். என் பட நாயகனும் கூட தான் நல்ல நிலையில் இருக்கும்போது இப்படத்தை ரிலீஸ் செய்திருந்தால் தனக்கு நல்ல நிலை கிடைத்திருக்கும் என வருத்தப்பட்டார்.
இப்படி நடக்கும் என்று எனக்கு முன்கூட்டியே தெரியும். என் சக நண்பர்கள், யாருமே பட வெளியிடாத நாளில் என் படத்தை ரிலீஸ் செய்ய சொன்னார்கள். அதற்கான சந்தர்ப்பம் அமையும் என எதிர்பார்த்து மூன்று வருடங்கள் கடந்து விட்டது. இனியும் பொறுத்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்து தான் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் செய்தேன். இதையெல்லாம் யாரும் புரிந்து கொள்வதில்லை. டிவியில் இருந்து வரவங்க எல்லாம் சிவகார்த்திகேயன் ஆக முடியாது. அவரின் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்கள் வெளிவந்த போது அவரை நான் பெரிய ஹீரோவாக பார்க்கவில்லை. ஆனால் எதிர்நீச்சல் படம் வெளியானபோது அவரை ஹீரோ என்ற அந்தஸ்தை தாண்டி ஒரு ஸ்டாராக பார்த்தேன். அதற்கு காரணம் அவருக்கு உறுதுணையாக நின்ற அனிருத், தனுஷ், நயன்தாரா ஆகியோர் தான். இதையெல்லாம் தாண்டி சிவகார்திகேயனுடைய உழைப்பு, அவமானங்கள், தாண்டி வந்த படிகளே அவர் இந்த உயரத்திற்கு வர காரணம். எனக்கும் இதுபோல் உறுதுணையாக நிற்க கண்டிப்பாக யாரேனும் வருவார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுவரை என் பணியை விடா முயற்சியோடு சிறப்பாக செய்வேன்" என்றார்.