மலையாளத்தில் ‘மனோதரங்கள்’ என்ற தலைப்பில் ஒரு ஆந்தாலஜி சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் மலையாள இலக்கியத்தில் புகழ்பெற்ற எம் டி வாசுதேவனின் 9 கதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸில் கமல்ஹாசன், மோகன்லால், மம்மூட்டி, ஃபஹத் பாசில், பார்வதி திருவோத்து, பிஜு மேனன், ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி என ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர். பிரியதர்ஷன், ரஞ்சித், ஷயாம்பிரசாத், அஸ்வதி வி நாயர், மகேஷ் நாராயணன், ஜெயராஜன், சந்தோஷ் சிவன், ரத்தீஷ் அம்பாட் உள்ளிட்டோர் இயக்கியுள்ளனர்.
இந்த சீரிஸ் ஆகஸ்ட் 15ஆம் தேதி மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதில் இயக்குநர் ஜெயராஜ் இயக்கிய ஒரு படத்துக்கு மலையாள மூத்த இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண் இசையமைத்துள்ளார். இந்த சீரிஸின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் ரமேஷ் நாராயணுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மலையாள நடிகர் ஆசிஃப் அலி மேடையிலிருந்து இறங்கி வந்து இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண் அமர்ந்திருந்த இடத்துக்கே வந்து கொடுத்தார். அப்போது அந்த விருதை அவர் கையால் வாங்க மறுத்த ரமேஷ் நாராயண், அதற்குப் பதிலாக இயக்குநர் ஜெயராஜைக் கொடுக்கச் சொல்லியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் ரமேஷ் நாராயண் ஆசிஃப் அலியை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த ரமேஷ் நாராயண், “ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் என்னை மேடைக்கு அழைக்காதது வருத்தமளிக்கிறது. ஆசிஃப் தான் எனக்கு விருது கொடுக்க வருகிறார் என்பது எனக்குத் தெரியாது. எனக்கு வயதாகிவிட்டது. தவிர, நான் மேடையில் இல்லை. ஒருவேளையில் மேடையில் ஏற்றப்பட்டு விருது கொடுக்கப்பட்டிருந்தால், என்னை நோக்கி யாரோ விருது கொடுக்க வருகிறார்கள் என்பதை அறிந்திருப்பேன். யாரையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல. ஒரு நடிகராக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன். மன்னித்துக்கொள்ளுங்கள். உண்மையைப் புரிந்து கொள்ளாமல் சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிடுவது வருத்தமளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.