Skip to main content

ராம் சரண் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியீடு

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

ramcharan next with Uppena movie director Buchi Babu Sana

 

'ஆர்.ஆர். ஆர்', 'ஆச்சார்யா' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து தற்போது 'ஆர்சி 15' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க தில் ராஜு தயாரிக்கிறார்.

 

கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராம் சரண் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் புஜ்ஜி பாபு சனா எழுதி இயக்குகிறார்.

 

இந்த அறிவிப்பிற்கான போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இதற்கு முன்னதாக 'உப்பென்னா' என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் அடுத்ததாக முன்னணி ஹீரோவான ராம் சரணுடன் கைகோர்த்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பானில் ராஜமெளலி படம் எடுத்த புதிய பரிணாமம்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
rajamouli rrr at japan

ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. 

இந்த நிலையில் ஜப்பானில் இப்படத்தின் சிறப்பு திரையிடல் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதனால் தனது குடும்பத்துடன் ஜப்பான் சென்ற ராஜமௌலி, சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டு உரையாடினார். பின்பு அவருக்கு 83 வயது மூதாட்டி ஒருவர், 1,000 ஓரிகமி கிரேன்களை பரிசாக வழங்கினார். அந்த சிறப்பு பரிசு குறித்து நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராஜமௌலி, “இது விலைமதிப்பில்லாத பரிசு” என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கடந்த 21ஆம் தேதி அங்கு நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்திருந்தார். 

இதனை தொடர்ந்து தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தை ஜப்பானிய பெண்கள் நாடகமாக அரங்கேற்றியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “110 வருட பழமையான தகராசுகா நிறுவனத்தால் எங்கள் ஆர்.ஆர்.ஆர் படம் இசை நாடகமாக அரங்கேற்றப்பட்டது எனக்கு பெருமை. படத்தைப் போலவே நாடகத்தையும் ஏற்றுக்கொண்ட ஜப்பானிய பார்வையாளர்களுக்கு நன்றி. உங்கள் வரவேற்பால் மனம் நெகிழ்ந்தேன்” எனக் குறிப்பிட்டு அந்த நாடகத்தில் நடித்த பெண்களுக்கு நன்றி தெரிவித்தார். 

ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் மட்டுமல்லாமல் ஆர்.ஆர்.ஆர் பட இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

"தெலுங்கு கொடி உயரப் பறக்கிறது" - ஆஸ்கர் குறித்து ஜெகன்மோகன் பெருமிதம்

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

andhra cm jagan mohan praises rrr for grabing oscar

 

உலக அளவில் திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருதானது சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2023ம் ஆண்டின் 95வது ஆஸ்கர் விருதுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதில் இந்தியாவின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் என்ற பிரிவிலும், 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படம் சிறந்த ஆவணக் குறும்படம் என்ற பிரிவிலும் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளன. முதன்முறையாக இந்திய மொழி சார்ந்த படங்கள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளன.

 

இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ட்விட்டர் பக்கம் வாயிலாக படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தெலுங்கு கொடி உயரப் பறக்கிறது. நம்முடைய நாட்டுப்புற பாரம்பரியத்தை கொண்டாடும் இப்பாடலுக்கு சர்வதேச அளவில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துகள். என்னையும், பல கோடி தெலுங்கு மக்களையும், அனைத்து இந்திய மக்களையும் பெருமைப்படச் செய்துள்ளீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

நடிகர் ராம்சரன், "ஆர்.ஆர்.ஆர் நம் வாழ்விலும் இந்திய சினிமா வரலாற்றிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த படமாக எப்போதும் இருக்கும். ஆஸ்கர் விருது வென்றதும் கனவில் வாழ்வது போல் உணர்கிறேன். இந்த தலைசிறந்த படைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பை வழங்கிய ராஜமௌலி மற்றும் கீரவாணி இருவருக்குமே நன்றி" எனக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜூனியர் என்.டி.ஆர், "நாங்கள் ஆஸ்கரை வென்றுவிட்டோம்" எனக் குறிப்பிட்டு ராஜமௌலி மற்றும் கீரவாணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.