தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் ராம் கோபால் வர்மா. இவர் முன்பு அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நரா லோகேஷ், மருமகள் ப்ராமினி மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து தெலுங்கு தேச கட்சியின் மண்டல செயலாளர் ராமலிங்கம் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நற்பெயருக்கு கலங்கம்ஏற்படுத்தும் விதமாக பதிவிட்டதாக ராம் கோபால் மீது குற்றம் சாட்டி அவருக்கு எதிராக புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் மடிப்பாடு காவல் நிலையத்தில் ராம் கோபால் வர்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் விசாரணைக்கு ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் ராம் கோபால் வர்மா விசாரணைக்கு ஆஜராகவில்லை. இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. பின்பு நீதிமன்றத்தை நாடினார் ராம் கோபால் வர்மா. அவருக்கு ஜாமீன் வழங்கியது ஆந்திர உயர்நீதி மன்றம். அதே சமயம் விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தியது. இந்த நிலையில் ராம் கோபால் வர்மா விசாரணைக்கும் ஓங்கோல் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.