ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படத்தில் அமிதாப்பச்சன் சத்யதேவ் என்ற கதாபாத்திரத்திலும் மஞ்சு வாரியர் தாரா என்ற கதாபாத்திரத்திலும் ஃபகத் ஃபாசில் பேட்ரிக் (Patrick) என்ற கதாபாத்திரத்திலும் ரித்திகா சிங் ரூபா என்ற கதாபாத்திரத்திலும் அபிராமி ஸ்வேதா என்ற கதாபாத்திரத்திலும் கிஷோர் ஹரிஷ் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
அனிருத் இசையில் இப்படத்திலிருந்து முன்னதாக வெளியான டைட்டில் டீசர் மற்றும் முதல் பாடலான ‘மனசிலாயோ...’ பாடல் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் அதில் ‘ஹன்டர் வன்டார் சூடுடா...’ பாடல் வெளியாகியிருந்தது. இதனிடையே படத்தின் டீசரும் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. டீசரை பார்க்கையில் என்கவுண்டர் பற்றி விரிவாகப் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிந்தது. இதனையடுத்து படத்தின் ட்ரைலர் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திட்டமிட்டபடி வேட்டையன் படத்தின் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் இன்று (02.10.2024) வெளியிட்டுள்ளது. அதில், ‘கைது செய் கைது செய்...’ எனக் காட்சிகள் தொடங்குகிறது. இதனையடுத்து ஒரு வாரம் ரொம்ப அதிகம் எனக் கூறி நடிகர் ரஜினிகாந்த் என்ட்ரி கொடுக்கிறார். மேலும், அமிதாப்பச்சன் இடம்பெற்றுள்ள காட்சிகளும் பரபரப்பை கிளப்புகின்றன. மொத்தம் 2 நிமிடங்கள் 39 விநாடிகளைக் கொண்டதாக டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அதே சமயம் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.