இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனையொட்டி இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஸ்டாராகவும் அரசியலில் அவ்வப்போது வந்து சென்ற நேரத்தில் குமுதம் இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் எழுதி வந்தார். அப்போது ஒரு வாசகர் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்தால் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ஜெயலலிதா ரஜினிகாந்த் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று பதிலளித்துள்ளார். ஜெயலலிதாவே என்னுடைய பேரை பரிந்துரை செய்திருக்கிறார் என்றால் அது என்னவென்று தெரிந்து கொள்ள எனக்குள் அதிக ஆர்வம் எழுந்தது. இதனையடுத்துதான் பொன்னியின் செல்வனின் நாவலை படிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகுதான் இந்த நாவலின் பிரம்மாண்டமும், மகத்துவமும் தெரிந்தது.
பொதுவாக எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் ஒரு புத்தகத்தை படிக்கும் போது முதலில் எத்தனை பக்கம் என்று தெரிந்த பிறகுதான் படிக்க ஆரம்பிப்பேன். 200, 300 பக்கம் இருந்தால் படித்துவிடுவேன். அதிக பக்கங்கள் இருக்கும் புத்தகங்களை நான் படிக்க மாட்டேன். அந்த நேரத்தில்தான் 1000 பக்கங்களுக்கு மேல் இருக்கும் பொன்னியின் செல்வன் நாவலை படிக்க சொன்னார்கள். ஆனால் அதிக பக்கங்கள் இருந்தால் நான் படிக்கவில்லை. ஜெயலலிதா வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு என்னுடைய பெயரை பரிந்துரை செய்ததை தொடர்ந்து அப்படி அந்த நாவலில் என்ன இருக்கிறது என்று பார்க்கவே படித்தேன். படித்துவிட்டு வியந்தே போய்விட்டேன். அப்படிப்பட்ட நாவலை மணிரத்னம் எப்படி படமாக்கி இருக்கிறார் என்பதனை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.