ரஜினிகாந்த் தற்போது அவரது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவருக்கான போர்ஷன் படமாக்கப்பட்டு முடிந்ததாக கடந்த 13ஆம் தேதி படக்குழு அறிவித்தது. லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இன்று இமயமலை பயணம் புறப்பட்டார் ரஜினிகாந்த். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒவ்வொரு வருஷமும் போறேன். கேதர்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்கு போறேன்” என்றார். மோடி மீண்டும் பிரதமராக வருவாரா என்ற கேள்விக்கு, “சாரி, அரசியல் கேள்வி கேட்காதீங்க” என்றார். இசையா, கவிதையா என்ற போட்டி குறித்த கேள்விக்கு, “நோ கமெண்ட்ஸ்” என பதிலளித்து மகிழ்ச்சியுடன் சென்றார்.
முன்னதாக 2010 ஆம் ஆண்டு வரை தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினிகாந்த். உடல்நலக்குறைவு காரணமாக இடையில் சில ஆண்டுகளாக இமயமலை செல்லாமல் இருந்த அவர், மீண்டும் காலா, 2.0 படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், தொடர்ந்தார். பின்பு கரோனா காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக இமயமலைக்குச் செல்லாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலை பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து வேட்டையன் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலை பயணம் செல்கிறார்.