சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர். முன்னணி பிரபலங்கள் ஒன்றாக நடித்துள்ளதால், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. வருகிற 10 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் சிறப்பு மற்றும் அதிகாலைக் காட்சி திரையிடப்படவில்லை. முதல் காட்சி காலை 9 மணியிலிருந்து தொடங்குகிறது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதனிடையே மலையாளத்தில் ஜெயிலர் என்ற அதே தலைப்பில் ஷகீர் மடத்தில் என்ற இயக்குநர் படம் எடுத்துள்ளார். இப்படமும் வருகிற 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக ஷகீர் மடத்தில், ரஜினியின் ஜெயிலர் படத்திற்கும், தன் படத்திற்கும் இடையூறு இல்லாமல் மலையாளத்தில் மட்டும் தலைப்பை மாற்றக் கோரி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டார். மேலும், படத்தின் தலைப்பை 2021 ஆம் ஆண்டு கேரள திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் கேரள பிலிம் சேம்பர் அலுவலகம் முன்பு தனியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் ஷகீர் மடத்தில். மேலும் அவர் கையில், ‘மலையாள சினிமாவைக் காப்பாற்றுங்கள்’ என்ற பதாகையை வைத்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ரஜினியின் ஜெயிலர் படமும், என்னுடைய படமும் ஒரே தேதியில் வெளியாவதால் திரையரங்கத்தில் என்னுடைய படத்தை நிராகரிக்கிறார்கள். கேரளாவில் தமிழ் சினிமாவின் தாக்கம் அதிகம் இருப்பதால் மலையாளப் படங்கள் மூச்சுத்திணறுகிறது" என்றார்.