கன்னிப்பருவத்திலே திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நாயகனாகவும் குணச்சித்திர கதாப்பாத்திரமாகவும் நடித்து வந்தார் கலைமாமணி நடிகர் ராஜேஷ்.
ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் திரைத்துறை வருவதற்கு முன்பு சென்னையில் உள்ள பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். ஆசிரியராக பணியாற்றியபோது திரைத்துறையில் நுழைய ஆசையிருந்தது; அதன்படி திரைத்துறையில் கால் பதித்தார்
திரைத்துறையில் இயற்கையான நடிகர் என்று பாராட்டப்பட்ட ராஜேஷ் சுமார் 45 ஆண்டுகளில் 150 படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போதும் நான்கு படங்களில் நடித்து வரும் இவர் கடந்த சில வருடங்களாக ஓம் சரவண பவ யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார், மேலும், ஜோதிடத்தில் நிபுணத்துவம் கொண்டவர்களையும் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கியவர்களையும் பேட்டி எடுத்தும் வந்தார்.
நக்கீரன் யூடியூப் சேனலில் சரித்திரம் என்ற நிகழ்ச்சியில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை நேர்காணல் செய்திருந்தார். நான்கு தொடராக வந்த நிகழ்ச்சி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக அரசு நியமித்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அந்த நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு நபர்களும் அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், கலைமாமணி நடிகர் ராஜேஷை நேரில் அழைத்தது வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பில் நடிகர் ராஜேஷுக்கு பொன்னாடை அணிவித்து, நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து கமல்ஹாசனும் நடிகர் ராஜேஷை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் ராஜேஷ் பொறுப்பேற்று கொண்டதை அறிந்த சிவகுமார், தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் தான் வரைந்த ஓவிய புத்தகத்தையும் நடிகர் ராஜேஷுக்கு வழங்கி மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.