பாலிவுட்டில் 1935ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு கதாநாயகனாக உருவெடுத்து புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் ராஜ் கபூர். இவரது கலை சேவையை கௌரவிக்கும் வகையில் 1988ஆம் ஆண்டு இவருக்கு இந்திய திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது இந்திய அரசால் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ராஜ் கபூரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகிற 13 முதல் 15 வரை திரைப்பட விழா நடைபெறவுள்ளது. பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த விழாவில் 14ஆம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராஜ் கபூரின் குடும்பத்தை சேர்ந்த பாலிவுட் முன்னணி நடிகர்களான ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர், சயீஃப் அலி கான், கரிஷ்மா கபூர், ரித்திமா கபூர் சாஹ்னி, ஆதார் ஜெயின், அர்மான் ஜெயின் மற்றும் நீது கபூர் உள்ளிட்ட பலர் நேற்று(10.12.2024) டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைத்து அவருடன் உரையாடினர்.
இது தொடர்பாக கரினா கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பலரும் இன்று தங்களது னது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பிரதமர் மோடியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளனர்.