Skip to main content

உதவி இயக்குநர்களை சர்ப்ரைஸ் செய்த பி. வாசு

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

p.vasu gifted laptop to his assistant directors

 

திரைத்துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மொத்தம் 64 படங்களை இயக்கி பிரபல இயக்குநராக வலம் வருபவர் பி. வாசு. தனது 65வது படமாக சந்திரமுகி 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். வருகிற 28 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா தயாரித்துள்ளது. கீரவாணி இசையமைத்துள்ளார். 

 

இதனிடையே நேற்று தனது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியுள்ளார் வாசு. அதில் ராகவா லாரன்ஸ், லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தலைவர் தமிழ்குமரன் உள்ளிட்ட சந்திரமுகி படக்குழுவினர் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்த நிகழ்வில் தனது உதவி இயக்குநர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் பி. வாசு. அவர்களுக்கு லேப்டாப் ஒன்றை பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இளையராஜா பாடல்கள் நம்மை ஆட்டிப்படைக்கும்” - குஷ்பு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
kushboo about ilaiyaraaja

பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான படம் சின்னதம்பி. பாலு தயாரித்திருந்த இப்படத்தில் மனோரோமா, ராதா ரவி, கவுணடமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இயக்குநர் வாசுவின் மகன் சக்தியும் சின்ன வயது பிரபு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றது. பாடல்களுக்கு வாலி மற்றும் கங்கை அமரன் வரிகள் எழுதியிருந்தனர். 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் கன்னடம், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்தில் தமிழில் வெளியான அதே ஆண்டில் ராமச்சாரி என்ற தலைப்பில் வெளியான நிலையில் ரவிச்சந்திரன் மற்றும் மாலாஸ்ரீ நடித்திருந்தனர். தெலுங்கில் சண்டி என்ற தலைப்பில் 1992ஆம் ஆண்டு வெளியான நிலையில் வெங்கடேஷ் மற்றும் மீனா நடித்திருந்தனர். இந்தியில் அனாரி என்ற தலைப்பில் 1993ஆம் ஆண்டு வெளியான நிலையில் தெலுங்கில் நடித்த வெங்கடேஷ் மற்றும் கரிஸ்மா கபூர் நடித்திருந்தனர்.  

கன்னடம் மற்றும் தெலுங்கில் பி.வாசு இயக்கியிருந்தார். இந்தியில் முரளி மோகன ராவ் இயக்கியிருந்தார். இசையில் தமிழை தவிர்த்து தெலுங்கில் மட்டும் இளையராஜா இசையமைத்திருந்தார்.   இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி நடிகை குஷ்பு, படம் குறித்து நெகிழ்ச்சியுடன் அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில், “நேரம் பறக்கிறது எனச் சொல்வார்கள், அது உண்மைதான். தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட சின்னதம்பி இன்றுடன் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிறது என்பதை நம்பவே முடியவில்லை. அந்தப் படம் எங்கள் வாழ்க்கையை மாற்றியது. 

எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் பி.வாசு சார் மற்றும் எனக்கு பிடித்த சக நடிகர் பிரபு சார். மறைந்த கே.பாலு தயாரிப்பாளர் எப்போதும் நினைவில் இருப்பார். ஒளிப்பதிவாளர் ரவீந்தர், என்னுடன் நடித்த துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இறுதியாக மெஜிசியன் இளையராஜா, அவரது பாடல்கள் வாழ்நாள் முழுவதும் நம்மை ஆட்டிப்படைக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Next Story

சபாஷ் போட வைத்ததா? - 'சந்திரமுகி 2' விமர்சனம்!

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

chandramukhi 2 review

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரிலேயே அதிக நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 2005 இல் வெளியான சந்திரமுகி திரைப்படம். முதன் முதலில் தமிழ் சினிமாவில் காமெடி பேய் படம் என்ற புதிய ஜானரை இந்தப் படமே அறிமுகம் செய்து வைத்தது. அதன் பின் இந்த ஜானரை பின்பற்றி வெளியான முனி, காஞ்சனா சீரிஸ் உட்பட பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. அந்த வகையில் தற்பொழுது ரஜினி ஏற்று நடித்த கதாபாத்திரத்தை ராகவா லாரன்ஸ் ஏற்று நடித்து சந்திரமுகி 2 பாகம் தற்பொழுது ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்தப் படம் முதல் பாகம் கொடுத்த அதே பரவசத்தை மீண்டும் கொடுத்ததா, இல்லையா?

 

முதல் பாகத்தைப் போலவே இந்த படத்திலும் ஒரு பெரிய குடும்பம் வேட்டையபுரம் அரண்மனைக்கு தங்க வருகின்றனர். வந்த இடத்தில் அவர்கள் மீண்டும் சந்திரமுகி ஆவியை தூண்டி விட்டு வெளியே வர வைத்து விடுகின்றனர். அதன் பின் சந்திரமுகி ஆவி ராதிகாவின் பெரிய குடும்பத்தை அழிக்க திட்டமிடுகிறது. இதை தடுக்க வேட்டையன் ஆவியும் களம் இறங்குகிறது. இதையடுத்து இந்த ஆவிகளிடமிருந்து அந்த குடும்பம் தப்பித்ததா, இல்லையா? வேட்டையனுக்கும், சந்திரமுகிக்கும் நடக்கும் சண்டையில் யார் ஜெயித்தார்? என்பதே சந்திரமுகி 2 படத்தின் மீதி கதை.

 

முதல் பாகத்தில் நாம் என்னவெல்லாம் பார்த்து, ரசித்து பரவசம் அடைந்தோமோ அதையெல்லாம் மீண்டும் ரீகிரியேட் செய்து அதன் மூலம் நம்மை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பி வாசு. முதல் பாகத்தில் ரஜினியும், வடிவேலும் முதல் பாதி முழுவதும் லூட்டி அடித்து நம்மை ரசிக்க வைத்தது போன்று இந்த படத்தில் பாகத்தில் ராகவா லாரன்ஸும் வடிவேலும் லூட்டி அடித்து ரசிக்க வைக்க முயற்சி மட்டுமே செய்திருக்கின்றனர். முதல் பாகத்தில் காமெடியில் இருந்த இளமையும், துடிப்பும் இந்தப் படத்தில் சற்றே மிஸ்ஸிங். அதேபோல் கிளிஷேவான காட்சிகளும் முதல் பாதி முழுவதும் படர்ந்து இருந்தது. இதனால் முதல் பாதி முழுவதும் பார்ப்பவர்களுக்கு சற்றே அயர்ச்சி கொடுப்பதை தவிர்க்க முடியவில்லை. இருந்தும் சந்திரமுகி பேய் வெளியே வந்தவுடன் ஆரம்பிக்கும் இரண்டாம் பாதி நன்றாக வேகம் எடுத்து குறிப்பாக சந்திரமுகியின் பிளாஷ்பேக் காட்சிகள் சிறப்பாக அமைந்து இரண்டாம் பாதியையும் காப்பாற்றி படத்தையும் கரை சேர்த்திருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ் பேக் மற்றும் நிகழ்கால காட்சிகள் சரிசம விகிதத்தில் கலவையாக திரைக்கதைக்கு வேகம் கொடுத்து, அதே சமயம் விவேகமான ரசிக்கும் படியான காட்சி அமைப்புகளும் ஒருசேர கவர்ந்து படத்தை காப்பாற்றி இருக்கிறது. அதற்கு பக்க பலமாக பின்னணி இசையும் அமைந்திருக்கிறது.

 

கதையின் நாயகனாக வரும் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அப்படியே பிரதிபலித்து நடித்து இருக்கிறார். பல காட்சிகள் ரஜினியின் மேனரிசம் திரையில் அப்படியே தெரிகிறது. இருந்தும் பிளாஷ்பேக் காட்சியில் வரும் வேட்டையன் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். இவரும் சந்திரமுகியாக வரும் கங்கனாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தனர். சந்திரமுகியாக வரும் கங்கனா ரனாவத் சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு நல்ல தேர்வு. நடனம், நளினம் என உடல் மொழி விஷயத்தில் சற்றே பின்தங்கி இருந்தாலும் முகபாவனைகள், வசன உச்சரிப்பு, நடிப்பு ஆகியவைகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று பட்டையை கிளப்பி இருக்கிறார் கங்கனா. குறிப்பாக இவருக்கும் லாரன்ஸ்க்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. பேரழகி சந்திரமுகிக்கே உரித்தான திமிரும், அழகும், பவ்யமும் ஒருசேர அழகாக இவருக்கு அமைந்து கதாபாத்திரத்திற்கு மேலும் அழகை கூட்டி இருக்கிறது. காமெடி டிபார்ட்மெண்ட்டை தன் தோளில் சுமந்து நடித்திருக்கும் வைகைப்புயல் வடிவேலு அவருக்கான வேலையை ஓரளவுக்கு சிறப்பாகவே செய்திருக்கிறார். அவரின் நகைச்சுவை சில இடங்களில் நம்மை சோதித்தாலும் சில இடங்களில் நமக்கு கிச்சு கிச்சு மூட்டவும் தவறவில்லை. அவருக்கென்று கிடைக்கும் கேப்புகளில் சின்னதாக கிடா வெட்டி இருக்கிறார்.

 

படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. வீட்டின் பெரிய அம்மாவாக வரும் ராதிகா ஆக்ரோஷமாகவும், அனுதாபமாகவும் நடித்து மீண்டும் கவனம் பெற்று இருக்கிறார். இவரது கணவராக வரும் சுரேஷ் மேனனும் அவரது பங்குக்கு நிறைவாக செய்திருக்கிறார். படத்தின் நாயகியாக வரும் மகிமா நம்பியார் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அதை நடிப்பிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கம் போல் இவருக்கு பெரிதாக வேலை இல்லை. தனக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேஸில் நிறைவான வேலையை செய்திருக்கிறார். இவருடன் வரும் சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா ஆகியோரும் அவரவருக்கான வேலையை செய்திருக்கின்றனர். கால் ஊனமுற்றவராக நடித்திருக்கும் லட்சுமிமேனன் ஆரம்பத்தில் சாதுவாக இருந்து இரண்டாம் பாதிக்கு மேல் வேறு விதமாக மாறி அமர்க்களப்படுத்தி இருக்கிறார். எந்தெந்த இடத்திற்கு எந்தெந்த வகையில் முகபாவனைகள் தேவையோ அதை சிறப்பாக கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ரவி மரியா, விக்னேஷ், மனோபாலா, சிவாஜி, சாமியார் உட்பட பலர் அவரவருக்கான வேலையை சிறப்பாகவே செய்திருக்கின்றனர்.

 

கீரவாணி இசையில் வரும் பேய் சம்பந்தப்பட்ட பின்னணி இசை படத்துடன் நம்மை ஒன்ற வைத்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. இவரது உலகத்தரம் வாய்ந்த இசை கொடுத்த பிரம்மாண்டம் படத்தையும் காப்பாற்றி இருக்கிறது. அதேபோல் இவரது இசையில் வரும் நீ கோசமே, தூரி தூரி தீம்தனனா பாடல்கள் ஹிட் ரகம். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவில் பிளாஷ்பேக் மற்றும் அரண்மனை சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கங்கனா சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

 

சந்திரமுகி முதல் பாகத்தில் நாம் என்னவெல்லாம் பார்த்தோமோ அதேபோன்று ஜெராக்ஸ் எடுத்த திரைக்கதையை இந்த படத்தில் வேறு நடிகர்களை மாற்றி வைத்து கொடுத்த இயக்குநர் பி வாசு அதை இன்னமும் முதல் பாகம் போல் ரசிக்கும் படி கொடுத்து இருந்தால் முதல் பாகம் கொடுத்த அதே பரவசம் தற்பொழுதும் கிடைத்திருக்கும். இருந்தும்  இரண்டாம் பாதி படத்தை காப்பாற்றி கரை சேர்த்திருக்கிறது.

 

சந்திரமுகி 2 - கொஞ்சம் சபாஷ் முகி!