Skip to main content

"ரஜினியிடம் சந்திரமுகி 2 படத்தின் கதையை சொன்னேன்" - ரகசியம் பகிர்ந்த பி. வாசு

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

p.vasu about chandramukhi 2

 

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு மற்றும் ராதிகா நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. முன்னதாக 'ஸ்வாகதாஞ்சலி' மற்றும் 'மோருனியே' பாடல் வெளியான நிலையில் நேற்று அனைத்து பாடல்களையும் படக்குழு வெளியிட்டது. இவ்விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். 

 

இயக்குநர் பி. வாசு பேசுகையில், '' நான் எப்போதும் மேலே பார்த்துக் கொண்டு நடக்க மாட்டேன். பின்னாடி பார்த்துக் கொண்டும் நடக்க மாட்டேன். மேலே பார்த்தால்.. இன்னும் இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ...! என்ற பயம் உண்டாகும். பின்னாடி பார்த்தால்... இவ்வளவு தூரம் ஏறி வந்திருக்கிறோம் என்ற திமிர் வந்துவிடும். அதனால் நான் எப்போதும் தலை குனிந்து.. தலை வணங்கி.. கீழே பார்த்துக்கொண்டு நடந்து கொண்டே இருப்பேன். எங்கே சென்று சேர வேண்டுமோ.. அங்கே சென்று சேர்வோம். 

 

இன்றைக்கு உள்ள திறமையான கலைஞர்கள் படைப்பாளிகள் ஆகியோரை காணும் போது இவர்களுடன் எப்படிப் போராட போகிறோம் என்றுதான் தோன்றுகிறது. இந்த மாலை வேலையை இனிமையான தருணமாக மாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றி. லைக்கா என்றாலே பிரம்மாண்டம் தான். இந்த பிரம்மாண்டத்திற்கு சிறிய உதாரணம் தான் இந்த இசை வெளியீட்டு விழா.

 

ரஜினி சாரிடம் சந்திரமுகி 2 படத்தின் கதையை சொன்னேன். அவர் ராகவா லாரன்ஸை உடன்பிறந்த தம்பியாகவே பார்ப்பார். அனைத்தையும் கேட்ட பிறகு, ‘நான் வணங்கும் என் குருவை வேண்டிக்கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்’ என வாழ்த்தினார். அவரிடம், ‘ஒன்று இல்லை என்றால், இரண்டு இல்லை. அந்த ஒன்று நீங்கள் தான். தற்போது இரண்டு தயாராகி இருக்கிறது’ என்றேன். இப்படித்தான் இந்த படம் தொடங்கியது.

 

தமிழ் குமரனிடம் இப்படத்தின் இரண்டு வரி கதையைத்தான் சொன்னேன். உடனே சரி படத்தின் பணிகளை தொடங்கலாம் என்றார். அதன் பிறகு கதையை உருவாக்கி, வடிவேலுவிடம் சொன்னேன். நான் இதுவரை அவரிடம் முழு கதையையும் சொன்னதில்லை.  ஏனெனில் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையே உள்ள ஒரே தொடர்பு வடிவேலு மட்டும் தான். சந்திரமுகி படத்தின் வெற்றிக்கு வடிவேலுவும் ஒரு காரணம் என்பதால், அவர் சந்திரமுகி 2 படத்திலும் இருக்க வேண்டும் என விரும்பினேன்.

 

அவர் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்திலேயே நான் இதில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். ஏனெனில் அவரைப் போன்ற திறமையான கலைஞர்கள் எல்லாம் வீட்டில் சும்மா உட்கார வைக்க கூடாது. அவர் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தால்.. மக்களுக்கு நோய் வந்து விடும். அவர் மக்களை சிரிக்க வைத்தவர். அவரைப் பார்த்து நாம் சிரித்து சிரித்து நோயில்லாமல் வாழ்கிறோம். அந்த வகையில் பார்த்தால் அவர் ஒரு டாக்டர். கொரோனா காலகட்டத்தின் போது எத்தனை குடும்பங்களை அவர் சிரிக்க வைத்திருப்பார். அவரைப் போன்ற நடிகர்கள் நமக்கு கிடைத்திருப்பது நாம் செய்த பெரும் பாக்கியம்" என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘சூப்பர்ஸ்டார் - லோகி சம்பவம் ஸ்டார்ட்’ - வெளியான அறிவிப்பு

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Coolie shooting starts

ரஜினிகாந்த் தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தின் மூலம் ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேலுடன் இணைந்து நடித்து வந்தார். அனிருத் இசையமைக்கும் இப்படம், வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்த மாதம் இறுதியில் ரஜினிகாந்த் அந்த படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொள்வார் என்று தகவல் வெளியானது. 

வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். ரஜினி, இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் ‘கூலி’ படத்தின் மூலம் கைகோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்ட்டர்களான அன்பரிவ் இந்த படத்திலும் ஸ்டண்ட் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். மேலும், இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து, விக்ரம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கிரிஷ் கங்காதரன், இப்படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளதாக அண்மையில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். மேலும் அவர், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் கூறியதாவது, ‘சூப்பர் ஸ்டார்- லோகி சம்பவம் ஆரம்பம்... கூலி படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது’ என அறிவித்துள்ளது. 

Next Story

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பாலகிருஷ்ணா

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
balakrishna to act in jailer 2

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவருக்கான போர்ஷன் படமாக்கப்பட்டு முடிந்து மற்ற நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. 

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜு இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் ஏற்கெனவே வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றது. ஜூன் 10ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

கூலி படத்தை தொடர்ந்து, மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. இதில் கதாநாயாகியாக நயன் தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தில் தெலுங்கு மூத்த நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர் முதல் பாகத்தின் போதே நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.