54வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா கோவாவில் கடந்த 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல மொழி படங்கள் பல்வேறு பிரிவுகளில் திரையிடப்பட்டது. அந்த வகையில் சுதிப்தோ சென் இயக்கத்தில் விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ படம் திரையிடப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவை சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் ஸ்ரீநாத், மற்றும் ஓவியர் அர்ச்சனா ஆகியோர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். மேலும் படத்தை கேலி செய்யும் மீம்ஸ் மற்றும் படத்தில் கூறப்பட்ட பல விஷயங்களை மறுக்கும் தரவுகள் அடங்கிய ஆவணங்களையும் கையில் வைத்திருந்தனர்.
அதோடு இயக்குநர் சுதிப்தோ சென்னிடம், இது தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்த அவர், “நீங்கள் படம் பார்த்தீர்களா? படம் பார்க்காதவரை அதைப் பற்றி பேச உங்களுக்கு உரிமை இல்லை. நீங்கள் படத்தைப் பார்த்தால் உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன்”என்றார். இதனால் போரட்டதில் ஈடுபட்ட இருவரையும் பனாஜி போலீஸார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களின் செல்போன்களையும் அடையாள அட்டையையும் பறிமுதல் செய்து, பின்பு 1 மணி நேரம் கழித்து விடுவித்தனர்.