மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள சம்யுக்தா தமிழில் களரி, ஜூலை காற்றில், எரிடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'வாத்தி' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் தமிழில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. இப்படம் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் சம்யுக்தா.
இந்த நிலையில் சம்யுக்தாவை பற்றி முன்பு நடந்த நிகழ்வு ஒன்றை தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வலைதள பக்கத்தில், "எனது பன்னிரெண்டு வருட சினிமா அனுபவத்தை நான் எப்போதும் இங்கு குறிப்பிடப்படுவதற்கு கடமைப்பட்டுள்ளேன். ‘எடக்காடு பட்டாலியன்’ படத்திற்கு முன் 8 படங்களும் அதற்கு பின் இரண்டு படங்களும் தயாரித்த தயாரிப்பாளர் நான். எடக்காடு பட்டாலியன் படத்தில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்திருந்தார்.
பல மாதங்களுக்கு பிறகு படம் ரிலீஸ் நெருங்குகிறது. அந்த சமயத்தில் 65% மட்டுமே சம்யுக்தாவுக்கு சம்பளம் கொடுக்க முடிந்தது. சம்யுக்தாவிடம் ஃபோன் பண்ணி கொஞ்சம் அவகாசம் கேட்டேன். நம்ம படம் தானே பிரச்சனையில்லை என்று பதிலளித்தார். பின்பு படம் ரிலீஸான இரண்டாவது நாள் சம்யுக்தா எனக்கு படம் தோல்வின்னு மெசேஜ் அனுப்பினாங்க. நமது படம் வெற்றி பெறவில்லை என எனக்கு தெரியும். நீங்கள் நமது படத்திற்கு பொருளாதார ரீதியாக பயன் பெற்றிருக்க மாட்டீர்கள். எனவே நீங்கள் எனக்கு கொடுக்க வேண்டிய பேலன்ஸ் பணம் எனக்கு வேண்டாம். நீங்கள் என்னை எவ்வளவு கட்டாயப்படுத்தினாலும் நான் வாங்கமாட்டேன். அடுத்த முறை சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்றார். அவரது பெரிய மனதுக்கு தலை வணங்க வேண்டியிருந்தது.
ஒரு வருடத்திற்கு 300க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகும் கேரளாவில் 5% படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. மலையாள சினிமாவுக்கு இதுபோன்ற நடிகர்கள் தேவை இவர்களைத் தயாரிப்பாளர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இப்ப சொல்லணும் போல தோணுச்சு அவ்ளோதான்" எனக் குறிப்பிட்டிருந்தார்.