Skip to main content

மதம் மாறிவிட்டேனா? - பிரியாமணி விளக்கம்

Published on 07/10/2024 | Edited on 07/10/2024
priyamani about his marriage controversey

பருத்திவீரன் படத்திற்காக தேசிய விருது வாங்கி பலரது பாராட்டை பெற்று பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் பிரியாமணி. 2012க்கு பிறகு தமிழில் நடிப்பதை குறைத்து விட்டு கன்னடம் மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்தார். சமீப காலமாக இந்தியிலும் நடித்து வருகிறார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் விஜய்யின் கடைசிப் படமான ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே 2017ஆம் ஆண்டு முஸ்தஃபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வேறு சமூகத்தை சார்ந்தவராக இருந்ததால் சில சர்ச்சைகள் எழுந்தது. இது தொடர்பாக ஏற்கனவே பேட்டிகளில் பிரியாமணி பேசியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “எனது நிச்சயத்தை நான் அறிவித்த போது சமூக வலைதளங்களில் வெறுப்பு கமெண்டுகளே வந்தது. உன் கணவர் ஒரு முஸ்லீம், அதனால் உனக்கு பிறக்கப் போகும் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்கள் என்றெல்லாம் பதிவிட்டனர். இதையெல்லாம் பார்க்கும் போது மனவருத்தமாக இருக்கிறது. ஏன் அவர்கள் கலப்பு திருமணம் செய்யும் ஜோடிகளை குறிவைக்கிறார்கள். ஜாதி விட்டு ஜாதி, மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பல பிரபல நடிகர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் அந்த மதத்தை உள்வாங்கி கொண்டதாகவோ ஏற்றுக் கொண்டதாகவோ அர்த்தம் கிடையாது. அவர்கள் மத வேறுபாடு இல்லாமல் காதலித்தனர். அவர்களை சுற்றி ஏன் இவ்வளவு வெறுப்பு என புரியவில்லை.

ரம்ஜானுக்கு நான் வாழ்த்து தெரிவித்த போது, மதம் மாறிவிட்டதாக சொன்னார்கள். நான் மாறினேனா இல்லையா என்று அவர்களுக்கு எப்படித் தெரியும். மாற வேண்டுமா இல்லையா என்பது என்னுடைய முடிவு. நான் தான் அது பற்றி யோசிக்க வேண்டும். திருமணத்திற்கு முன்பே நான் மதம் மாறமாட்டேன் என முஸ்தஃபா ராஜிடம் சொல்லிவிட்டேன். நான் இந்துவாக பிறந்தேன். அந்த மத நம்பிக்கையையே பின்பற்றி வருகிறேன். அவரும் அவரது மத நம்பிக்கையை பின்பற்றுகிறார். இருவரும் அவரவர் மத நம்பிக்கையை மதித்து வாழ்ந்து வருகிறோம்.” என்றார்.

சார்ந்த செய்திகள்