Skip to main content

குட்டி யானைக்கு உணவளித்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

President draupadi Murmu met the couple Bomman and Belli

 

கார்த்திகி கோன்சால்வேஸ் இயக்கத்தில் குனீத் மோங்கா தயாரித்திருந்த ஆவணக் குறும்படம் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்'. நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை பராமரிப்பு பணியாளர்களாக பணியாற்றி வருகின்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி, தாயைப் பிரிந்து உடம்பில் காயங்களுடன் இருந்த ஒரு குட்டி யானையை ரகு எனப் பெயரிட்டு வளர்த்து வந்ததை குறித்து இப்படம் எடுக்கப்பட்டது. 

 

இப்படம் 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த ஆவணக் குறும்படப் பிரிவில் விருது வாங்கிய நிலையில், அதன் மூலம் உலகளவில் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி பலரின் கவனத்தை ஈர்த்தனர். இவர்களை நேரில் அழைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டினார். பின்பு பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு வந்த நிலையில் முதுமலை தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகை தந்து பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியை பாராட்டினார். 

 

கடந்த மாதம் டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பொம்மன் - பெள்ளி தம்பதி சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழகம் வந்துள்ளார். இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிடுவதற்காக, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி வந்தார் திரௌபதி முர்மு. பின்பு கார் மூலம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வருகை தந்த அவர் முகாமை பார்வையிட்டார். அடுத்து அங்கு, ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன், பெள்ளி தம்பதியை சந்தித்தார். அப்போது குட்டியானை பொம்மிக்கு கரும்புகளை உண்ணக் கொடுத்தார். மேலும் தெப்பக்காடு பகுதியில் உள்ள பழங்குடியின மாதிரி கிராமத்தையும் பார்வையிட்டார். 

 

முதுமலை யானைகள் முகாமில் தற்காலிகப் பராமரிப்பாளராகப் பணியாற்றிய பெள்ளி, அண்மையில் முதல் பெண் யானை பராமரிப்பாளராக தமிழ்நாடு அரசால் பணி நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்