இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதியும், நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே13ஆம் தேதியும் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதியும், ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியும் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனால் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பிரதமர் மோடி, பல்வேறு ஊடகங்களுக்குப் பேட்டிகளை அளித்து வருகிறார். அந்த வகையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “மகாத்மா காந்தி உலகில் சிறந்த மனிதர்களில் ஒருவர். கடந்த 75 ஆண்டுகளில் மகாத்மா காந்தியை உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. மகாத்மா காந்தி பற்றிய திரைப்படம் வெளியாகும் வரை அவரைப் பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை. அதன் பிறகுதான் அவரை பற்றி உலக நாடுகளுக்கு தெரியவந்தது” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மகாத்மா காந்தி குறித்த பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ், “பிரதமர் நரேந்திர மோடி அவர்களே... நீங்கள் பள்ளிக்கு சென்றிருந்தால் எங்கள் காந்தியைப் பற்றி அறிந்திருப்பீர்கள்; உங்கள் வாட்ஸ் அப் பல்கலைக்கழகத்தை விட்டு வளருங்கள்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.