பிரகாஷ் ராஜ் கடைசியாக மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். தமிழில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது தனுஷின் ராயன், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா உள்ளிட்ட சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை கைவசம் வைத்துள்ளார்.
தமிழ், மலையாலம், கன்னடம், இந்தி என ஏகப்பட்ட மொழிகளில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ் 5 முறை தேசிய விருது வென்றுள்ளார். நடிப்பதை தாண்டி இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். திரைப்படங்களைத் தாண்டி அரசியல் ரீதியாக தனது கருத்துகளை தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார். மேலும் பா.ஜ.க-வை தீவிரமாக எதிர்த்து வருகிறார்.
இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் பிரகாஷ் ராஜ். அவருக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும் அரசியல் சாசனத்தில் ஆறாவது அட்டவணையை அமல்படுத்தக்கோரியும் பொறியியலாளர் மற்றும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நடத்தி வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளதாக பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமக்காக, நம் நாட்டிற்காக, நமது சுற்றுச்சூழலுக்காக, நமது எதிர்காலத்திற்காக போராடும் லடாக் மக்களுடன் துணை நிற்போம். சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் கலந்துகொண்டு எனது பிறந்தநாளைக் கொண்டாடினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Its my birthday today .. and i’m celebrating by showing solidarity with @Wangchuk66 and the people of ladakh who are fighting for us .. our country .. our environment and our future . 🙏🏿🙏🏿🙏🏿let’s stand by them #justasking pic.twitter.com/kUUdRakYrD— Prakash Raj (@prakashraaj) March 26, 2024