Skip to main content

‘பொன்னியின் செல்வன்’.. ஆன்லைனில் காத்திருந்த அதிர்ச்சி - புலம்பும் ரசிகர்கள்

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

ponniyin selvan online scam

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் இன்று  திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு திரையரங்கம் ஹவுஸ்புல்லாகியுள்ளது. இதனிடையே படத்திற்கான டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக ரசிகர்கள் பலரும் குறை கூறி வருகின்றனர். 

 

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை பயன்படுத்தி மோசடி ஒன்று நடந்துள்ளது. அதில் பொன்னியின் செல்வன் படம் டெலிகிராமில் வெளியாகியுள்ளதாக தகவல் கிடைக்க, படத்தின் மீதான எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் பலர் டெலிகிராம் பக்கம் குவிய தொடங்கியுள்ளன. அந்த டெலிகிராம் லிங்கில் படம் இருப்பதாக செயலி காண்பிக்க, படத்தை பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் லிங்கை க்ளிக் செய்துள்ளனர்.  குறிப்பிட்ட தொகையை கட்டணமாகச் செலுத்தினால் உடனே படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து பலரும் ஆன்லைன் வழியாக பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் பணத்தை செலுத்திய பல மணி நேரமாகியும் படம் வராமல் லோடிங் என்று வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆன்லைன் மோசடிகள் குறித்து 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் பண இழப்பைத் தடுக்கலாம்” - டி.ஜி.பி சைலேந்திரபாபு

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

complaint online scams within 24 hours can prevent money loss DGP Sylendra Babu

 

கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமை தாங்கி குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களைப் பார்வையிட்டார். தொடர்ந்து விருத்தாசலம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஓராண்டில் நடந்த 24 திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட 92 பவுன் நகைகளையும் சிதம்பரம், காடாம்புலியூர் பகுதியில் 4 திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட 38 பவுன் நகைகளையும் உரியவர்களிடம் சைலேந்திரபாபு ஒப்படைத்தார்.

 

மேலும் மாவட்டத்தில், பொதுமக்கள் தவறவிட்ட 15 செல்போன்கள் ஐ.எம்.இ.ஐ எண் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பல்வேறு குற்ற வழக்குகளில் திறம்படச் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை பாராட்டி பரிசு வழங்கினார். அதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த சைலேந்திரபாபு, "கடலூர் மாவட்டத்தில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட 130 பவுன் நகைகள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் போலீசார் புலன் விசாரணை நல்ல முறையில் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முத்தாண்டிக்குப்பம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் இரண்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து 36 மணி நேரத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அறிவியல் ரீதியாக போலீசார் புலன் விசாரணை செய்து பழைய வழக்குகளிலும் தொடர்புடைய குற்றவாளிகளை பிடித்து வருகின்றனர்.

 

தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. 1,32,000 காவலர்களைக் கொண்ட தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் பேரை நியமித்தோம். இதுவரை உள்ள அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. பெரும்பாலான காவல் நிலையங்களில் வயது குறைந்த இன்ஸ்பெக்டர்கள்,  சப்-இன்ஸ்பெக்டர்கள்  மற்றும் துணை போலீஸ் சூப்பரண்டுகள் தான் அதிக அளவில் பணிபுரிகின்றனர். தமிழ்நாடு எல்லையான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய எல்லைகளில் உள்ள 26 முக்கிய சோதனைச் சாவடிகளில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆயுதமேந்திய போலீசார் 24 மணி நேரமும் சோதனை நடத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் மற்ற துறைகளுடன் இணைந்து 16 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து சோதனை நடத்தப்படும். இணையவழி குற்றங்களான சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சைபர் க்ரைம் என்பது எதிர்காலத்திற்கான குற்றங்கள் ஆகும். இதுவரை மக்கள் சந்திக்காத குற்றங்கள் அவை. வேலை வாங்கித் தருவதாகவும் தொழில் தொடங்க உதவுவதாகவும் மேல் அதிகாரிகள் பேசுவதாகவும் எனப் பல்வேறு வழிமுறைகளில் சைபர் க்ரைம் குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

 

இதற்கு 24 மணி நேரத்திற்குள் 190 என்ற கட்டுப்பாட்டு எண்ணில் புகார் அளித்தால் உங்கள் பணத்தை பரிமாற்றம் செய்ய விடாமல் தடுக்க முடியும். பண இழப்பையும் தடுக்க முடியும். சிவகங்கையில் சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்டவரிடம் 26 ஆயிரம் சிம் கார்டுகள், 1200 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களில் ரூபாய் 5 கோடி தொகைக்கான குற்றங்களில் இதுவரை ரூபாய் 32 லட்சம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்போனில் காவல் உதவி என்ற செயலியை பதிவிறக்கம் செய்து ஆபத்து காலத்தில் பயன்படுத்தலாம்" என்று கூறினார். அப்போது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

 

Next Story

பொன்னியின் செல்வன்; இயக்குநர் மணிரத்னத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

Ponniyin Selvan Case against director Mani Ratnam has dismissed

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான படம் பொன்னியின் செல்வன். இப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் இயக்குநர் மணிரத்னம் வரலாற்றை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் மனு கொடுத்திருந்தார். அந்த புகார் மனுவில், "வந்தியத்தேவன் கதாபாத்திரம் பெண்கள் பின்னால் திரியும் ஒரு காதல் மன்னன் போல பொய்யாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சோழ பேரரசில் முக்கிய அங்கம் வகித்த வந்தியத்தேவன் குறித்து தவறாக சித்தரித்து மக்கள் மத்தியில் தவறான எண்ண அலைகளை பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் மணிரத்னம் கொண்டு சேர்த்துள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கு நீதிபதி ராஜா மற்றும் பரதன் சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுதாரரிடம், “பொன்னியின் செல்வன் நாவலைப் படித்திருக்கிறீர்களா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர், “நாவலைப் படிக்கவில்லை” எனப் பதிலளித்துள்ளார். “நாவலைப் படிக்காத நிலையில் எப்படி வரலாற்றைத் திரித்துள்ளதாகக் கூறமுடியும்” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “இப்படம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதே தவிர, வரலாற்றைத் தழுவி எடுக்கப்படவில்லை” எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.