இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் 52வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை வாழ்த்தி பதிவுகள் பதிவிட்டு வந்தனர். சில ரசிகர்கள் ரஹ்மானின் வீட்டு வாசல் முன்பு கூடி வாழ்த்தினர்.
இந்நிலையில் பிறந்தநாளையொட்டி, தா ஃப்யூச்சர்ஸ் என்கிற பெயரில் ஒருங்கிணைந்த கலை அமைப்பை ரஹ்மான் உருவாக்கியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை ரஹ்மான் சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டியிலுள்ள அவரின் ஒய்.எம் ஸ்டுடியோவில் சந்தித்தார். அப்போது அவர் அந்த அமைப்பு குறித்து பேசினார்.
அதில், “புதிய கலை அமைப்பு தமிழகத்தின் கலாச்சார விஷயங்களை இளம் தலைமுறைக்கு கொண்டுசெல்லும் விதமாக ‘தா ஃப்யூச்சர்ஸ்’ என்னும் இந்த அமைப்பை உருவாக்கி உள்ளோம். இக்கால குழந்தைகள் யூ-ட்யூப் வழியாகவே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அந்த அறிவோடு நம் கலாச்சாரம், நற்பண்புகளையும் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதை முன்னெடுக்கும் முயற்சியாக போஸ்டனை சேர்ந்த எம்ஐடி கல்லூரி மற்றும் இயக்குனர் பரத்பாலாவுடன் இணைந்து இப்பணியில் ஈடுபட உள்ளோம். சமூக வலைதளம் வழியாக மேலும் பலரும் இதில் ஒன்றிணையலாம்” என்று தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரஹ்மானிடம் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து இடம்பெற்றிருக்கிறாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், “அதை அந்த படத்தின் இயக்குனர் மணிரத்னம்தான் உறுதி செய்ய வேண்டும். வைரமுத்து பணியாற்றுவது குறித்து படக்குழுவினருடன் கலந்து பேசி ஆலோசனை செய்ய வேண்டும்” என்றார்.