Skip to main content

"உன் மடி கிடந்தால் தவிதவிக்கிறதே..." - காதல் மகிழ்ச்சியில் குந்தவை த்ரிஷா

 

ponniyin selvan 2 Aga Naga Lyrical video released |

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த செப்டம்பரில் வெளியான படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதுவரை உலக அளவில் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் முதல் பாடல் 'அக நக' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை சக்தி ஸ்ரீ கோபாலன் பாட இளங்கோ கிருஷ்ணன் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தின் முதல் பாகத்தில் வந்தியத்தேவன் கார்த்தி, குந்தவை த்ரிஷாவை முதல் முறையாக பார்க்கும் காட்சியில் 'அக நக' பாடல் சில வினாடிகள் வரும். 

 

அதில் த்ரிஷாவின் தம்பியான அருண் மொழி வர்மன் ஜெயம் ரவியை இலங்கையிலிருந்து அழைத்து வரும்படி கார்த்தியிடம் கேட்டுக் கொள்வார். மேலும் பாதுகாப்பாக வரச் சொல்வார். அப்போது உயிர் உங்களுடையது தேவி என கார்த்தி பதிலளிப்பார். அப்போதே இருவருக்கும் காதல் மலர்ந்து விடுவது போல் இருக்கும். இப்பாடலை பார்க்கையில், கார்த்தி ஜெயம் ரவியை அழைத்து வந்தவுடன் மீண்டும் த்ரிஷாவை சந்திக்கும்போது இடம்பெறும் எனத் தெரிகிறது. இதில் இருவரின் காதலை வெளிப்படுத்தும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது.  

 

முதல் பாகத்தில், வந்த சில நொடிகளே ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் முழுப் பாடலும் வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு "உன் வழி நடந்தால் உயிர் மலர்ந்திடுதே... உன் மடி கிடந்தால் தவிதவிக்கிறதே..." என்ற வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.