Skip to main content

த.வெ.க. தலைவர் விஜய்க்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Political leaders wished Vijay on his birthday

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய இன்று தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பொதுவாக விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் மக்கள் இயக்கத்தை அண்மையில் அரசியல் கட்சியாக மாற்றிய விஜய், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்துள்ளார். 

இதனிடையே கள்ளச்சாராயம் குடித்து 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அவரது கட்சி தொண்டர்களுக்குத் தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம். அதற்குப் பதில் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அரசியல் ரசிகர்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் விஜய்க்கு  எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஆளும் அரசின் விழாக்களுக்கு செல்வது மட்டும் திரைத்துறையின் பணியல்ல. மக்கள் பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் குரலை அரசியல் என்று‌ விடுவார்கள். திரைத்துறையினரும் குரல் கொடுத்தால் அரசால் திசை திருப்ப இயலாது. கள்ளக்குறிச்சி விவகாரம் அரசியல் அல்ல பாமர மக்கள் மீதான அதிகார‌ தாக்குதல். எல்லாம் கொடுத்த மக்களுக்காக ஏன்‌ குரல் கொடுக்க கூடாது என்பதே எல்லோரின் கேள்வியாகும். மக்கள் படும் துயரங்களைக் கண்டு மற்றவர்களை போன்று தூரம் செல்லாமல் குரல் கொடுத்து நேரிலும் சென்று ஆறுதல் தெரிவித்த தம்பி விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். திரைப்பணியோடு நின்று விடாமல் மக்கள் பணியிலும் ஈடுபடவுள்ளது வரவேற்கத்தக்கது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளன், “இன்று பிறந்தநாள் காணும் அன்பு இளவல் - தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனர் விஜய் அவர்களுக்கு எமது இனிய வாழ்த்துகள். நலமோடு வளமோடு நீடு வாழ்க.  அய்யன் வள்ளுவரின் வாக்கொப்ப "எண்ணிய எண்ணியயாங்கு எய்துப"” எனக் கூறியுள்ளார். 

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, “இளைய தளபதி என்று லட்சக்கணக்கான ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 50-வது பிறந்தநாளில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அவரை மனதார வாழ்த்துகிறேன். கலைத்துறையின் மூலம் தமிழக மக்களின் குறிப்பாக, இளைஞர்களின் அன்பையும், பேராதரவையும் பெற்று வருகிற அவர் வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்று, பொது வாழ்க்கையில் மேலும் சேவைகளை தொடர்ந்து செய்திட வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்த் திரையுலக முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி விஜய்க்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் திரு.விஜய் அவர்கள் பூரண உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்