Plan Panni Pannanum

பாசிட்டிக் ப்ரிண்ட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. இப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

Advertisment

இந்நிகழ்வில் நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், "பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் இப்படத்திற்கு உங்கள் முழு ஆதரவையும் தந்து வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இப்படத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் பணியாற்றினோம். எனது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது என்பது என்னுடைய கனவுகளில் ஒன்று. அது இப்போது நனவாகியிருக்கிறது. கோவிட் தடங்கல்கள் எத்தனை வந்தாலும் அந்த இன்னல்களைத் தாண்டி இத்திரைப்படம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இந்த பொதுமுடக்கம் நம் மீது பெரும் அழுத்தங்களையும், சோகங்களையும் தந்தது. அந்த கடினமான காலகட்டத்தை தாண்டி இப்போது அனைவரும் திரையரங்குகள் வந்து திரைப்படங்களைப் பார்த்து மகிழலாம்" எனக் கூறினார்.

Advertisment

நடிகை ரம்யா நம்பீசன் பேசுகையில், "மீண்டும் திரையரங்குகள் செயல்பட ஆரம்பித்துள்ளது எங்கள் குழுவில் அனைவருக்கும் மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. திரையுலகில் இது அனைவருக்கும் கடினமான காலமாக இருந்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் ஓடிடி தளங்கள் சினிமாவுக்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தது. ஆனாலும் அனைவரும் திரையரங்குகளில் படங்களை பார்க்க வேண்டும். அப்போதுதான் சினிமா வளரும். இத்திரைப்படத்தை நீங்கள் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தர வேண்டும்" எனக் கூறினார்.

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் பேசுகையில், "திரையுலகை சேர்ந்தவர்களும், ஊடக நண்பர்களும் இந்த பொதுமுடக்க காலத்தில் மிகப்பெரிய துன்பங்களை கடந்து வந்தார்கள். அவையனைத்தையும் கடந்து இப்போது திரையரங்குகள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளதும், எங்கள் படம் வெளியாவதும், அனைவருக்குமே மிக மகிழ்ச்சி. தயாரிப்பாளர்களின் துணிச்சலான முடிவுகளால் மட்டுமே இன்று இது சாத்தியமாகியுள்ளது. இப்படத்தில் ரியோ மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இன்னும் பல படங்கள் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். ரம்யா நம்பீசன் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர். எளிதில் எந்த ஒரு படத்தையும் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்தப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். பால சரவணன் இப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருப்பார். பூர்ணிமா ரவி இளைய தலைமுறை ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெறுவார். 100 சதவீதம் காமெடி சரவெடியாக இத்திரைப்படம் இருக்கும். 2021 செப்டம்பர் 24 அனைவரும் இப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.