எஸ். சுகன் இயக்கத்தில் ஜி.சிவராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிதா’. இப்படம் இந்தியாவிலேயே 23 மணி 23 நிமிடங்களில் எடுத்து முடிக்கப்பட்ட படமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆதேஷ் பாலா, மாஸ்டர் தர்ஷித், சாம்ஸ், ஸ்ரீராம் சந்திரசேகர், அருள்மணி, அனு கிருஷ்ணா, ரெஹனா மற்றும் மாரீஸ் ராஜா ஆகியோர் நடித்துள்ளனர். ஜூலை 26ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் இயக்குநர் பேரரசு மற்றும் மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
அந்நிகழ்ச்சியில் பேரரசு பேசுகையில், “சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருந்தாலும் அவரும் மனிதர் தான். அவருக்குள்ளும் ஆதங்கம் இருக்கும், எங்கேயாவது ஒரு இடத்தில் சராசரி மனிதனாக வாழ அவர் ஆசைப்படலாம். அந்த வகையில் நடந்து முடிந்த அம்பானி வீட்டுக் கல்யாணத்தில் பங்கேற்று சராசரி மனிதனாக டான்ஸ் ஆடினார். அது ரஜினி எப்படி ஆடலாம் என பேசு பொருளானது. சூப்பர் ஸ்டாராக இருந்தால் உங்களுக்கு அவர் அடிமையா?. எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு எப்போதும் அவர் கையில் முத்திரை வைத்துக்கொண்டும் உட்கார்ந்து இருக்க வேண்டுமா?
சில இடங்களில் அவரை சராசரி மனிதனாக வாழ விடுங்கள். இதை எல்லாம் பெரிதாக விமர்சனம் பண்ணிக்கொண்டு உள்ளார்கள். இதை எல்லாம் அவர் பார்த்தால் கூனி குறுகிவிடுவார். என்னடா சின்னதா டான்ஸ் ஆடினோம் இதை பெரிய குற்றம்போல விமர்சித்து வருகின்றனர் என நினைப்பார். கொலை, கள்ளச்சாராயம் என ஆயிரத்துத்தெட்டு பிரச்சனை உள்ளது நாட்டில், அதைப் பேசாமல் சின்னதா ஒரு மூமண்ட் ஆடினதைப் பேசுகின்றனர்” என்றார்.