Skip to main content

தீண்டாமையா? - குற்றச்சாட்டுகளுக்கு திரையரங்க நிர்வாகம் விளக்கம்; போலீசார் நேரில் விசாரணை

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

pathu thala theatre untouchability issue theater management explained

 

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'பத்து தல' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (30.03.2023) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தைக் காண சிம்பு ரசிகர்கள் உள்ளிட்ட சினிமா ரசிகர்கள் பலரும் திரையரங்குகளில் கூடியுள்ளனர். அந்த வகையில், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் பெண்கள் சிலர் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் படம் பார்க்க டிக்கெட் எடுத்துள்ளனர். அவர்கள் சாலையோரம் பாசி மணி விற்பவர்கள் என்பதை அறிந்த திரையரங்க ஊழியர், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால் அங்கே இருந்த ரசிகர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. பலரும் தீண்டாமை கடைப்பிடித்துள்ளதாகக் கண்டங்கள் எழுப்பி வந்தனர்.

 

பின்பு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார், இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது. எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள்  அனைவருக்கும் சொந்தமானது" எனப் பதிவிட்டுள்ளார். 

 

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திரையரங்கம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்து தல திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பு இன்று காலை எங்கள் வளாகத்தில் நடந்த சூழ்நிலையை நாங்கள் கவனித்தோம். படத்தைப் பார்க்க டிக்கெட்டுகளுடன் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் திரையரங்கிற்குள் நுழைய முயன்றனர். இப்படம் யு/ஏ சான்றிதழுடன் வெளியாவதால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சட்டப்படி யு/ஏ சான்றிதழ் பெற்ற எந்தத் திரைப்படத்தையும் பார்க்க அனுமதிக்க முடியாது.

 

2, 6, 8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பத்தினருக்கு எங்கள் டிக்கெட் சோதனை ஊழியர்கள் இந்த அடிப்படையில் அனுமதி மறுத்துள்ளனர். இந்த சூழலை புரிந்து கொள்ளாமல் அங்கு இருந்தவர்கள் வேறு கோணத்தில் பார்த்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனையைத் தவிர்க்க அதே குடும்பத்தினர் சரியான நேரத்தில் படத்தைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த குடும்பத்தினர் படம் பார்க்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இது தொடர்பாக கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் திரையரங்க நிர்வாகத்திடம் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.   

 

 

 

சார்ந்த செய்திகள்