பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.
அந்நிகழ்ச்சியில் பார்வதி திருவோத்து பேசுகையில், “தங்கலான் படத்தில் எனக்குக் கொடுத்த கங்கம்மாள் கதாபாத்திரத்திலிருந்து கண்டிப்பாக என்னால் வெளியே வர முடியாது. பா. ரஞ்சித் உடன் இணைந்து வேலை செய்ய வேண்டுமென நீண்ட நாள் ஆசை. அவர் கால் செய்ததும் உடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அவரை நான் அதிகமாகக் கேள்விகள் கேட்டு மிகவும் டார்ச்சர் செய்துள்ளேன். ஆனால் அவர் தொடக்கத்திலிருந்து பொறுமையாக இருந்தார். அவர் உரிவாக்கின கதைகள், உலகங்கள், அரசியல் என அனைத்திலும் அவருடன் ஒத்துப்போகிறேன். கங்கம்மாவாக வாழ கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி. கிட்டத்தட்ட 30 படங்கள் பண்ணியுள்ளேன். நிறைய நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் ஒரு நடிகரிடம் இருக்கக்கூடிய மிகப்பெரிய பண்பான பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் விக்ரம். அவர் ‘தங்கலான’ டீமுடன் மிகவும் பணிவாக இருந்தார். அவர் விக்ரம் மட்டுமில்லை என்னுடைய கதாபாத்திரமான கங்கம்மாவுக்கு எப்போதும் அவர் ‘தங்கலான்’தான், அதற்காக நன்றி. அவர் செய்த அந்த தங்கலான் கதாபாத்திரத்தை இதற்கு முன்பு இந்த உலகம் பார்த்ததே கிடையாது. அந்த ட்ரீட்க்கு தயாராக இருங்கள்.
சினிமா என்பது வாழ்க்கையில் பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால் நம்ம வாழ்க்கையில் எது செய்தாலும் எல்லாமே அரசியல்தான். அதனால் தங்கலான் படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ல் ரிலீஸாகப்போவது தற்செயலானது இல்லை. விடுதலை, அடக்குமுறை போன்ற வார்த்தைகளை நாம் சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். சமத்துவமின்மை ஏன் இருக்கிறது? என்பதைப் பற்றி நாம் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் தனிப்பட்ட விருப்பம் என்பதும், கலை என்பதும் அரசியல் தான். அதை வழிநடத்தும் ரஞ்சித் ஆர்மியில் ஒரு படை வீராங்கனையாக இருப்பதில் மகிழ்ச்சி” என்றார்.