மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகம் போலவே தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக நாளை (28.04.2023) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அதற்காக இந்தியா முழுவதும் மும்பை, ஹைதராபாத், சென்னை என பல்வேறு இடங்களில் தீவிரமாக ப்ரோமோஷன் செய்தனர் படக்குழுவினர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பில் மணிரத்னம், பார்த்திபன், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது பார்த்திபன் பேசுகையில், "மணிரத்னத்தின் உதவியாளர் என்னிடம் வந்து, சார்... முதல் பாகத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நீங்க பேசியது வைரலானது. அதுபோல இந்த சந்திப்பிலும் ஏதாவது பேசுங்க... என்று சொன்னார். இப்படத்திற்காக படக்குழுவினர் ப்ரோமோஷன் செய்ததை விட வைரலாக பேச முடியுமா என தெரியவில்லை. லைகா தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ரூ.1000 கோடி அல்லது ரூ.500 கோடி வசூலிக்கும் என தெரியாமல் மணிரத்னம் போன்று ஒரு மகத்துவமான இயக்குநருடன் இணைந்துள்ளார். மணிரத்னத்தின் லட்சிய படத்துக்கு சுபாஷ்கரன் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம்.
மணிரத்னம் படத்தில் உழைப்பை கொட்டிருக்கிறார் என்பதை விட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் வார்த்தைகளை கொட்டிருக்கிறார். அது ரொம்ப ஆச்சரியமாக இருக்கு. அவர் இவ்ளோ பேசி நான் கேட்டதே இல்லை. நிறைய இடங்களில் அந்த நேரத்துக்கு ஏற்றாற்போல் பொய் சொல்வது என்னுடைய பாணி. அதையும் மணிரத்னம் ஃபாலோ செய்கிறார். அதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு.
சில பேர் ஸ்டைல் பண்ணா மயிறு மாதிரி இருக்கும். ஆனால் விக்ரம் மயிரை வச்சுக்கிட்டே இவ்ளோ ஸ்டைல் பண்றாரு. மயிர் கூச்செரியும் காட்சிகள் என்று நாம் பயன்படுத்துவோம். கூஸ்பம்பஸ் (goosebumps) என்று சொல்லுவோம். மயிறு என்பது தூய தமிழ் வார்த்தை. கெட்ட வார்த்தை அல்ல. கெட்ட வார்த்தையாக அதை நாம் முடிவெடுத்து கொள்கிறோம். தங்களால் முடித்த ஒரு ஸ்டைலை தங்கலான் மூலம் செஞ்சுருக்குறாரு. இப்படத்தில் பல பேர் நடித்துள்ளனர். அவர்களுடன் ஒரு பெருமைமிகு, அந்த மீ... அதாவது நானாக இருப்பதில் மகிழ்ச்சி" என்றார்.