நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்துள்ள 'பரியேறும் பெருமாள்' படம் கடந்த வாரம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கதை மாந்தர்கள், கதைக் களம், கதை சொல்லும் பாங்கு, கதை கூறும் கருத்து என அத்தனையும் சேர்ந்து பார்வையாளர்களுக்கான முழு சினிமாவாக இப்படம் உருவாக திரைக்குப் பின்னால் உழைத்தவர்கள் பலபேர்களில் இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீஈதர், கலை இயக்குநர் ராமு, எடிட்டர் செல்வா ஆர்.கே ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது. அதிலும் இவர்களில் குறிப்பாக படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கேவுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. பிரபல படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் ளிடம் அசோசியேட் எடிட்டராக பணியாற்றிய செல்வா ஆர்.கே இப்படம் குறித்த அனுபவங்கள் குறித்து பேசும்போது...
"இரஞ்சித் அண்ணா என்னைக் கூப்பிட்டு நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தில் முதல் படம் பண்ண போகிறோம். இதுதான் ஸ்கிரிப்ட், ரொம்ப எமோசனலான ஸ்கிரிப்ட், முழுசா படிச்சிட்டு சொல்லு. அப்படின்னு சொன்னார். நானும் இயக்குனர் மாரிசெல்வராஜிடம் ஸ்கிரிப்ட் வாங்கி படிச்சிட்டு போய், யார் அந்த அப்பா கேரக்டர் பண்ண போறாங்கன்னு கேட்டேன். மேலும், முழு ஸ்கிரிப்டும் படிச்சிட்டதால என்னால ஈசியா கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சது. இப்படிப்பட்ட கதைக்காகத்தான் நான் காத்திருந்தேன். அதனால் எளிதாக ஆர்வத்துடன் என்னால் வேலை செய்ய முடிந்தது. மேலும் விஷ்வாலா படம் எடிட்டிங் டேபிளுக்கு வரும் போது என்னால புரிஞ்சிகிட்டு வேலை பார்க்க முடிஞ்சது. இயக்குநர் மாரி செல்வராஜ் எடிட்டிங்கிற்கு உட்காரும் போதே, அந்த காட்சியின் பிண்ணனியைக் குறித்தும், அதன் எமோஷன் குறித்தும் விளக்கி விடுவார். அது இன்னமும் எனக்கு வேலை செய்ய சுலபமாய் அமைந்தது. இந்த வெற்றி எனக்கு பெரிய திருப்புனையையும், நம்பிக்கையையும் தந்திருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த ரஞ்சித் அண்ணாவிற்கும், மாரி செல்வராஜுக்கும் எனது நன்றிகள்" என்றார்.