Skip to main content

“தமிழக அரசே... போராட விடு” - பா.ரஞ்சித்

Published on 09/10/2024 | Edited on 09/10/2024
pa ranjith about samsung labours protest

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 9ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமூகமான முடிவு இன்னும் எட்டவில்லை. இதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கம்யூனிஸ்ட், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் இந்த சம்பவம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.  

தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அணுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை. தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு” என்றுள்ளது.

சார்ந்த செய்திகள்